உடலில் பொருத்தும் அடையாள ‘சிப்’

இன்று ஸ்மார்ட்போன்களுடன் திரியும் நாம், இன்னும் சில வருடங்களில் உடலில் பொருத்திக் கொண்ட சிப் மூலமாக தகவல் தொடர்பு கொள்வோம் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் ஏற்கனவே கணித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

Update: 2017-08-03 16:30 GMT
 அவர்களின் கணிப்பை மெய்யாக்கும் விதமாக பொருட்களிலும், உடைகளிலும், உடலிலும் பொருத்தும் வகையில் பலவிதமான சிப்கள் அறிமுகமானவண்ணம் உள்ளன. பொருட்களில் பொருத்தப்படும் சிப்கள் அவற்றின் இருப்பிடத்தை அறியவும், இயக்கத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன. உடலில், உடையில் பொருத்தும் சிப்களும் பலவிதமான பணிகளை செய்வதுடன், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு கருவியாகவும் செயல்படுகின்றன.

தற்போது மனித உடலில் பொருத்திக் கொள்ளும் மிகச்சிறிய சிப் ஒன்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரில் செயல்படும் ‘திரீ ஸ்கொயர் மார்க்கெட்’ எனப்படும் ஒரு தனியார் நிறுவனம், தனது நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் இந்த சிப்பை இலவசமாக வழங்கி உடலில் பொருத்திக் கொள்ள கூறி இருக்கிறது.

‘ஆர்-பிட் சிப்’ (RFID chip) எனப்படும் இந்த சிப், ஒரு அரிசியின் அளவே உள்ளது. இதை நகத்தின் அடியில் பதுக்கி வைக்க முடியும். ஊழியர்களை உடலில் பொருத்திக் கொள்ளச் சொல்லியிருக்கும் அந்த நிறுவனம், இந்த சிப்களின் உதவியால் பல்வேறு அலுவலக பணிகளை எளிமையாக்கிக் கொண்டுள்ளது.
தற்போது பல நிறுவனங்களுக்குள் நுழைய அடையாள அட்டை அல்லது விரல் ரேகை வைத்த பிறகுதான் செல்ல முடியும். இனி அவை தேவையில்லை. இந்த சிப் உடலில் பொருத்தியிருந்தாலே அலுவலக கதவு தானாக திறக்கும்.

வருகையும், செல்லும் நேரமும் துரிதமாக பதிவாகிவிடும். அத்துடன் அலுவலக கணினியும் தானாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அலுவலக கேன்டீன்களில் தேவையான பொருட்களை இதிலிருந்து கிளம்பும் ஒலிஅலை சமிக்கை மூலம் வாங்கிக்கொள்ள முடியும்.

ஊழியர்கள் தங்கள் சொந்த தேவைகள் சிலவற்றுக்கும் இதை பயன்படுத்த முடியும். தங்கள் செல்போனை திறக்க இதை ஒரு பாதுகாப்பு வசதியாக செய்து கொள்ளலாம். அலுவலகம் சார்ந்த மற்றும் உடல்நல தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியும். வை-பை தளங்கள் போல, ஆர்-பிட் தளங்களில் இந்த சிப்பை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யலாம். மணிப்பர்சை மறந்து வைத்துவிடுவது அல்லது தவறவிடுவது போன்ற தொல்லைகளை தவிர்க்க இது உதவும். ஒருவேளை இந்த சிப்பை தவறவிட்டாலும் இதிலிருந்து யாரும் தகவல்களை திருட முடியாது. அனைத்து தகவல்களும் அலுவலக அல்லது கட்டுப்பாட்டு மையத்திலேயே சேகரமாகி இருக்கும்.

“இது ஜி.பி.எஸ். போல ஊழியர் இருக்கும் இடத்தை காட்டிக்கொடுக்கும் அல்லது பின் தொடரும் சாதனமல்ல. இது ஆர்பிட் தளங்களை நெருங்கியதும் தொடர்பை ஏற்படுத்தும் சிறு சிப் அவ்வளவுதான்” என்கிறார்கள் இந்த பயன்படுத்தும் அந்த நிறுவனத்தினர். புதுமையான கண்டுபிடிப்புகளால் நன்மை விளைந்தால் சரிதான்.

மேலும் செய்திகள்