கோவையில் காய்ச்சல் பரவும் 21 இடங்கள்

கோவை நகரில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் 21 இடங்கள் கண்டறியப்பட்டு சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Update: 2017-08-03 12:00 GMT
கோவை

கோவையில் சீதோஷ்ணநிலை மாற்றத்தால் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. நகரில் காய்ச்சல் பரவி வரும் பகுதிகளாக 21 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த பகுதிகளில், மாநகராட்சி சுகாதாரத்துறையினர் 2 வாரம் முகாமிட்டு, தீவிர சுகாதாரப் பணிகளில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

காய்ச்சல் பரவி வரும் பகுதிகள் வருமாறு:-

மசக்காளிபாளையம், சேரன் மாநகர், காளப்பட்டி, நேருநகர், சிங்காநல்லூர், நஞ்சுண்டாபுரம், கரும்புக்கடை, உக்கடம் பைபாஸ், சுங்கம், சவுரிபாளையம், சங்கனூர், பீளமேடு, காந்தி மாநகர், கணபதி, போத்தனூர், கரும்புக்கடை, குனியமுத்தூர் ,சுந்தராபுரம், செல்வபுரம், கவுண்டம்பாளையம், சீரநாயக்கன்பாளையம் பகுதிகளாகும்.

இந்த பகுதிகளில் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். கொசு ஒழிப்பு பணி, சாக்கடை தூர்வாருதல், மருத்துவ முகாம் நடத்துதல், யாருக்கேனும் காய்ச்சல் இருந்தால், அவ்வீதியில் வசிக்கும் அனைவருக்கும் தடுப்பூசி, மருந்து, மாத்திரை வழங்குதல், நிலவேம்பு கசாயம் வழங்குதல், குப்பை அள்ளுதல், பிளச்சிங் பவுடர் தூவுதல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வார்டுக்கு, 10 பேர் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஒரு சுகாதார ஆய்வாளர், 4 வார்டுகளை கவனிக்கிறார் என்றால், அவருக்கு கீழ், 40 கொசு ஒழிப்பு தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை ஒரே நாளில் ஒரு பகுதியில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதன்படி, 21 இடங்களிலும் தொடர்ந்து இரண்டு வாரங்கள் செயல்படும் வகையில் செயல் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்