கும்மிடிப்பூண்டி அருகே மின் உற்பத்தி தொழிற்சாலையை கண்டித்து போராட்டம்
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையத்தில் மின் உற்பத்தி தொழிற்சாலையை கண்டித்து போராட்டம்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான மின்உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இங்கு தொழிற்சாலைக்கு நிலம் அளித்தவர்களும், உள்ளூரை சேர்ந்த சிலரும் என மொத்தம் 17 பேர் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தனர். தற்போது அவர்களில் 4 பேரை முன் அறிவிப்பின்றி வேலையை விட்டு நிறுத்திய தொழிற்சாலை நிர்வாகம் புதிதாக சிலரை பணியமர்த்தி வருவதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக வேலை செய்து வரும் தொழிலாளர்களை வேலையை விட்டு நிறுத்திய தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து அங்கு தினக்கூலியாக வேலை செய்து வரும் அனைத்து தொழிலாளர்களும் நேற்று மேற்கண்ட தொழிற்சாலை முன்பு திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்த ஊழியர்கள் மற்றும் ஆந்திராவில் இருந்து கரி ஏற்றி வந்த லாரிகளை அவர்கள் சிறை பிடித்தனர். தகவலறிந்து பாதிரிவேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சிவகுமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அரசு உத்தரவின்படி உள்ளூர் மக்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டு வந்த ஒரு சில அடிப்படை வேலைகளை கூட தற்போது தொழிற்சாலை நிர்வாகம் பறித்துக்கொள்வது தொடர்பாக அரசு அதிகாரிகள் மற்றும் தொழிற்சாலையின் முக்கிய நிர்வாகிகளின் முன்னிலையில் கூட்டம் நடத்தப்பட்டு சுமுக தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை ஏற்று கொண்ட தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அங்கு 3 மணி நேரம் பரபரப்பு நிலவியது.