ரூ.19 லட்சம் திருடியவரை கைது செய்து பணத்தை மீட்டு தாருங்கள் போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்
மாதவரம் அருகே, ரூ.19 லட்சம் திருடியவரை கைது செய்து பணத்தை மீட்டு தரும்படி சென்னை போலீஸ் கமிஷனரிடம், பெண் புகார் செய்தார்.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை நாகூர் மீரான் தோட்டம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் சிவராமன். சென்னை துறைமுகத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு கவுதம் (5) என்ற மகனும், யாஷிகா(2) என்ற மகளும் உள்ளனர்.
சிவராமனுக்கு 2 அண்ணன்கள் மற்றும் ஒரு தங்கை உள்ளனர். இவர்கள் குடும்பத்துக்கு சொந்தமான வீடு சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ளது. சமீபத்தில் இந்த வீடு விற்பனை செய்யப்பட்டு சிவராமனுக்கு பங்கு தொகையாக ரூ.19 லட்சம் கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி கொடுக்கப்பட்டது. அவர், அந்த பணத்தை தன் வீட்டின் பீரோவில் வைத்து இருந்தார்.
ரூ.19 லட்சம் திருட்டு
சம்பவத்தன்று அவரது வீட்டுக்கு உறவினர் போல் வந்த 3 பேர், பீரோவில் இருந்த ரூ.19 லட்சத்தை திருடிச்சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் மாதவரம் பால்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அந்த தெருவில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவங்களை வைத்தும், கிருஷ்ணவேணிக்கு வந்த செல்போன் எண்ணை வைத்தும் போலீசார் துப்பு துலக்கினார்.
அதில் நெல்லையைச் சேர்ந்த கிருஷ்ணவேணியின் உறவினர் ராம்ராஜ் என்பவர்தான், தனது நண்பர்களான சென்னை புதுப்பேட்டை ஹால்ஸ் சாலையைச் சேர்ந்த திலக்(27), புதுப்பேட்டை சர்மித் தெருவைச் சேர்ந்த வனராஜ் (32) ஆகியோருடன் கிருஷ்ணவேணி வீட்டுக்கு சென்று அவரை ஏமாற்றி நூதன முறையில் பணத்தை திருடியது தெரிந்தது.
இதையடுத்து வனராஜ், திலக் இருவரையும் போலீசார் கைது செய்தனர். ராம்ராஜ் பணத்துடன் தலைமறைவாகி விட்டார்.
கமிஷனரிடம் புகார்
இந்தநிலையில் நேற்று கிருஷ்ணவேணி தனது கைக்குழந்தையுடன் சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம் புகார் அளித்தார். அதில், ரூ.19 லட்சம் திருடிய ராம்ராஜை கைது செய்து, பணத்தை மீட்டு தரவேண்டும் என கூறி இருந்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட கமிஷனர் விஸ்வநாதன், பணத்துடன் தலைமறைவான ராம்ராஜ் என்பவரை உடனடியாக பிடிக்குமாறும், அவரிடம் இருந்து பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்குமாறும் மாதவரம் துணை கமிஷனர் கலைச்செல்வனுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாதவரம் போலீசார் தலைமறைவான ராம்ராஜை தேடி வருகின்றனர். ராமராஜ் பிரபல கொள்ளையன் என்பதும், தனியாக இருக்கும் பெண்களிடம் உறவினர் போல் நடித்து அவர்களிடம் பலகுரல்களில் பேசி மயக்கி கொள்ளையடிப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.