சேத்துப்பட்டு-கீழ்ப்பாக்கம் பகுதியில் மேயர் ராமநாதன் சாலை, ஈ.வெ.ரா. சாலை 6-ந் தேதி முதல் இருவழி பாதையாக மாற்றம்
மேயர் ராமநாதன் சாலை, ஈ.வெ.ரா. சாலை 6-ந் தேதி முதல் மீண்டும் இருவழி பாதையாக மாற்றப்படும் என்று அறிவிப்பு.
சென்னை,
சென்னை சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள மேயர் ராமநாதன் சாலை, ஈ.வெ.ரா. சாலை 6-ந் தேதி முதல் மீண்டும் இருவழி பாதையாக மாற்றப்படும் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று இரவு போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மீண்டும் இருவழி பாதை
ஈ.வெ.ரா. பெரியார் சாலையில் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை சந்திப்பு முதல் ஈகா சந்திப்பு வரை மெட்ரோ ரெயில் கட்டுமான பணி நடைபெற்றதால் கடந்த 8.11.2011 அன்று முதல் ஈ.வெ.ரா சாலை, மேயர் ராமநாதன் சாலை (கிழக்கு), மேயர் ராமநாதன் சாலை, டாக்டர் குருசாமி பாலம், கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை ஆகியவை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டது.
தற்போது பெரும்பாலான மெட்ரோ ரெயில் கட்டுமான பணி முடிவடைந்துள்ளதால், ஒருவழி பாதையாக இருந்த மேற்கண்ட சாலைகள் 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் கீழ்கண்ட மாற்றங்களுடன் இருவழி பாதையாக மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
* ஈ.வெ.ரா. சாலையில் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை சந்திப்பிலிருந்து ஈகா சந்திப்பை நோக்கி வாகன போக்குவரத்து நேராக செல்ல அனுமதிக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை கெங்கு ரெட்டி சுரங்கப்பாதையிலிருந்து தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி வலது புறம் திரும்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய வாகனங்கள் ஸ்பர்டாங்க் சாலை - பி.டி. ஸ்கூல் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி உடுப்பி சிக்னல், நாயர் பாலம் வழியாக செல்லலாம் அல்லது கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை வழியாக சென்று பர்னபி சிக்னலில் யூ திருப்பம் மேற்கொண்டு செல்லலாம்.
* பிளவர்ஸ் சாலை வழியாக ஈ.வெ.ரா சாலையை அடையும் வாகனங்கள் ஈகா சந்திப்பை நோக்கி வலதுபுறம் திரும்ப இயலாது. அத்தகைய வாகனங்கள் கெங்கு ரெட்டி சந்திப்பில் யூ திருப்பம் மேற்கொண்டு ஈகா சந்திப்பை நோக்கி செல்லலாம்.
டெய்லர்ஸ் சாலை
* ஈ.வெ.ரா. சாலையில் கெங்கு ரெட்டி சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் ஈகா சந்திப்பில் வாசு தெருவை நோக்கி வலதுபுறம் திரும்ப இயலாது. அத்தகைய வாகனங்கள் டெய்லர்ஸ் சாலை சந்திப்பை அடைந்து யூ திருப்பம் மேற்கொண்டு வாசு தெருவை அடையலாம்.
* ஈ.வெ.ரா சாலையில் டெய்லர்ஸ் சாலை சந்திப்பில், டெய்லர்ஸ் சாலையிலிருந்து ஈ.வெ.ரா. சாலையை நோக்கி வரும் வாகனங்கள் பள்ளி நேரங்களான காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை தவிர மற்ற நேரங்களில் அமைந்தகரையை நோக்கி வலதுபுறம் திரும்ப இயலாது. மேற்படி வாகனங்கள் ஈகா சந்திப்பை அடைந்து யூ திருப்பம் மேற்கொண்டு அமைந்தகரையை நோக்கி செல்லலாம்.
ஸ்பர்டாங்க் சாலை
* ஸ்பர்டாங்க் சாலை (மேயர் ராமநாதன் சாலை) இருவழி பாதையாக மாற்றப்பட்டதை தொடர்ந்து எழும்பூர் நெடுஞ்சாலையிலிருந்து வந்து கெங்கு ரெட்டி சுரங்கப்பாதையை நோக்கி செல்லும் வாகனங்கள் பி.டி.ஸ்கூல் சந்திப்பில் இ்டதுபுறம் திரும்பி காசா மேஜர் சந்திப்பில் யூ திருப்பம் மேற்கொண்டு கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை வழியாக ஈ.வெ.ரா. சாலையை நோக்கி செல்லலாம்.
* ஈ.வெ.ரா. சாலையில் இருந்து குருசாமி பாலம் வழியாக சேத்துப்பட்டு சந்திப்பை அடையும் வாகனங்கள் ஹாரிங்டன் சுரங்கப்பாதையை நோக்கி வலதுபுறம் திரும்ப இயலாது. மேற்படி வாகனங்கள் ஸ்டெர்லிங் சந்திப்பில் யூ திருப்பம் மேற்கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லலாம்.
* ஸ்டெர்லிங் சந்திப்பிலிருந்து வள்ளுவர் கோட்டம் சாலை வழியாக சேத்துப்பட்டு சந்திப்பை அடையும் வாகனங்கள் மேயர் ராமநாதன் சாலை நோக்கி வலது புறம் திரும்ப இயலாது. மேற்படி வாகனங்கள் குசலாம்பாள் கல்யாணமண்டபம் சர்வீஸ் சாலை வழியாக யூ திருப்பம் மேற்கொண்டு செல்லலாம்.
ஹாரிங்டன் சாலை
* ஹாரிங்டன் சாலை வழியாக சேத்துப்பட்டு சந்திப்பை நோக்கி வரும் வாகனங்களுக்கு நேராகவும், வலது புறம் மற்றும் இடது புறம் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.
* ஸ்பர்டாங்க் சாலை வழியாக சேத்துப்பட்டு சந்திப்பை நோக்கி வரும் வாகனங்களுக்கு நேராகவும், வலது புறம் மற்றும் இடது புறம் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.
* ஈ.வெ.ரா சாலையில் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு காவலர் வீட்டு வசதி கழகம் எதிரில் பிரத்தியேகமாக வசதி செய்து தரப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.