பூந்தமல்லி அருகே ‘பிக்பாஸ்’ அரங்கில் பணியாற்றிய ஊழியர் திடீர் சாவு
பூந்தமல்லி அருகே ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி அரங்கத்தில் பிளம்பராக பணியாற்றி வந்த ஊழியர் திடீர் உடல்நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார்.
பூந்தமல்லி,
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தற்போது நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதற்காக பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் வீடு போன்று பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு, தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த அரங்கிற்கு வெளியே மோட்டார் இயக்குவது, பிளம்பிங் உள்ளிட்ட பணிகளில் மும்பையை சேர்ந்த ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தனி அறையில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
உடல் நலக்குறைவு
மும்பையை சேர்ந்த கலீம் இப்ராகிம் ஷேக் (வயது 29) என்பவர் இங்கு பிளம்பராக வேலை செய்து வந்தார். அரங்கிற்கு வெளியே நேற்று முன்தினம் குழாய் பதிக்கும் பணியில் கலீம் இப்ராகிம் ஷேக் ஈடுபட்டு வந்தார். வேலை முடிந்து அறைக்கு சென்ற அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
சக ஊழியர்கள் அவருக்கு முதல் உதவி அளித்தனர். இதனால் அவருக்கு சற்று உடல் நலம் தேறியது. பின்னர் மற்ற ஊழியர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது கலீம் இப்ராகிம் ஷேக் உடல் அசைவற்று கிடந்தார்.
சாவு
இதனால் அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள், அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கலீம் இப்ராகிம் ஷேக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த நசரத்பேட்டை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.