அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்ட 36 பேர் கைது
அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் தொடர்ச்சியாக வழிப்பறி, சங்கிலி பறிப்பு, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தது.
ஆவடி,
அம்பத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் சர்வேஷ் ராஜ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அம்பத்தூர் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், கொரட்டூர், பூந்தமல்லி, போரூர், திருவேற்காடு ஆகிய பகுதிகளில் கடந்த மாதத்தில் தொடர்ச்சியாக வழிப்பறி, சங்கிலி பறிப்பு, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தது.
இதையடுத்து உதவி கமிஷனர்கள் தலைமையிலான தனிப்படை போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர். அதன் அடிப்படையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 36 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து, விசாரணைக்கு பிறகு சிறையில் அடைத்தனர். கைதானவர்களிடம் இருந்து 109 பவுன் நகைகள், ரூ.48 ஆயிரத்து 620 ரொக்கம், 5 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் ஆகியவை மீட்கப்பட்டன. தலைமறைவாக உள்ள பழைய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.