பாரிமுனை பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ‘திடீர்’ சோதனை
சென்னை பாரிமுனை பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.
சென்னை,
சென்னை பாரிமுனை பஸ் நிலைய வளாகத்தில் உள்ள உணவு கடைகளில் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்வதாக சென்னை மாவட்ட கலெக்டருக்கு புகார் கள் வந்தன. இதையடுத்து, அவர் உணவு பாதுகாப்பு துறைக்கு இதுதொடர்பான தகவலை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சதாசிவம், ஜெயமோகன், இளங்கோ, லோகநாதன், கண்ணன், ராஜாமுகமது ஆகியோர் சென்னை பாரிமுனை பஸ் நிலைய வளாகத்தில் உள்ள டீ, பாஸ்ட்புட், பழச்சாறு, ஸ்வீட் கடைகள் என மொத்தம் 33 கடைகளில் திடீரென்று நேற்று சோதனை நடத்தினார்கள்.
பறிமுதல்
அப்போது பழச்சாறு கடையில் 45 லிட்டர் தரமில்லாத பழச்சாறு இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும், மற்ற கடைகளில் சோதனை நடத்தியதில் தரமற்ற 25 கிலோ பிரியாணி, 15 கிலோ டீ தூள், செயற்கை சாயம் பூசப்பட்ட 10 கிலோ பச்சை பட்டாணி உள்பட உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு ரூ.13 ஆயிரத்து 500 என்றும், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களை எச்சரிக்கை செய்து இருப்பதாகவும், இதுபோன்ற புகார்கள் இருந்தால் உடனே உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.