வருமானவரி சோதனை நடத்தி காங்கிரசை அழிக்க பா.ஜனதா சதி பரமேஸ்வர் குற்றச்சாட்டு

வருமானவரி சோதனை நடத்தி காங்கிரசை அழிக்க பா.ஜனதா சதி செய்கிறது என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2017-08-02 21:00 GMT

பெங்களூரு,

வருமானவரி சோதனை நடத்தி காங்கிரசை அழிக்க பா.ஜனதா சதி செய்கிறது என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசியல் உள்நோக்கத்துடன்...

கர்நாடக மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த வருமானவரி சோதனை குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் நடைபெறும் இந்த சோதனையை நாங்கள் கண்டிக்கிறோம். தொழில் தொடர்பாக இந்த சோதனை நடந்திருந்தால் இதை நாங்கள் எதிர்க்க மாட்டோம். குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் தங்கியுள்ள சூழ்நிலையில் இந்த சோதனையை நடத்துவது சரியல்ல. இதற்கு எதிராக நாங்கள் போராடுவோம்.

காங்கிரசை அழிக்க பா.ஜனதா சதி

கர்நாடகத்தில் இன்னும் பல மந்திரிகளின் வீடுகளில் வருமானவரி சோதனை நடைபெற வாய்ப்பு உள்ளது. வருமான வரி சோதனையை நடத்தி அரசியல் ரீதியாக காங்கிரசை அழிக்க பா.ஜனதா சதி செய்கிறது. குஜராத்தில் நடைபெறும் டெல்லி மேல்–சபை தேர்தலில் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோத செயல் ஆகும்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

மேலும் செய்திகள்