பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரியில் விண்ணப்ப வினியோகம் தொடங்கியது
பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரியில் விண்ணப்ப வினியோகம் நேற்று தொடங்கியது. இதை ஏராளமான மாணவ–மாணவிகள் வாங்கிச் சென்றனர்.
நெல்லை,
பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரியில் விண்ணப்ப வினியோகம் நேற்று தொடங்கியது. இதை ஏராளமான மாணவ–மாணவிகள் வாங்கிச் சென்றனர்.
சித்த மருத்துவ படிப்புதமிழகத்தில் சித்த மருத்துவ படிப்பு, யூனானி, ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் ஆகிய படிப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் சென்னையிலும், பாளையங்கோட்டையிலும் அரசு சார்பில் சித்த மருத்துவ கல்லூரி நடத்தப்படுகிறது. சென்னை சித்த மருத்துவ கல்லூரியில் 50 இடங்களும், பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரியில் 100 இடங்களும் உள்ளன. ஆங்கில மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவ–மாணவிகள் சித்த மருத்துவ படிப்பில் சேர்ந்து படிப்பது வழக்கம்.
இந்த நிலையில் ஆங்கில மருத்துவ படிப்பில் சேருவதற்கு மத்திய அரசு நீட் தேர்வு நடத்தியது. இந்த தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தக்கூடாது என்று கூறி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆங்கில மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பித்த ஏராளமான மாணவ–மாணவிகள் சித்த மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு முடிவு செய்து நேற்று விண்ணப்பங்கள் வாங்க சித்த மருத்துவ கல்லூரிக்கு வந்தனர்.
பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரியில் நேற்று காலை 10 மணி முதல் விண்ணப்பங்கள் வினியோகம் தொடங்கியது. ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.500, இந்த தொகையை வங்கி வரைவோலை மூலமாக வழங்கவேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்கு அவர்கள் சாதி சான்றிதழின் நகல் இணைக்கவேண்டும்.
விண்ணப்பம் வினியோகம்மாணவிகளுக்கு விண்ணப்ப வினியோகத்தை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) திருத்தணி வழங்கி தொடங்கி வைத்தார். இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) திருத்தணி கூறுகையில், பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரியில் கடந்த ஆண்டு 1000 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
இந்த ஆண்டு கூடுதலாக 500 விண்ணப்பங்கள் சேர்த்து 1,500 விண்ணப்பங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளது. இந்த விண்ணப்பங்கள் வருகிற 30–ந் தேதி வரை வினியோகம் செய்யப்படுகிறது. விண்ணப்பங்களை அதிக அளவில் மாணவிகள் வாங்கி செல்கிறார்கள். சித்த மருத்துவ படிப்பு மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவ–மாணவிகளிடையே அதிக வரவேற்பு உள்ளது என்றார்.