ராஜீவ்காந்தி கொலை கைதி ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கக்கோரிய மனு தள்ளுபடி
ராஜீவ்காந்தி கொலை கைதி ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ராஜேஸ்வரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
எனது மகன் ரவிச்சந்திரன் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 26 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 26 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.
குடும்ப சொத்து பாகப்பிரிவினைக்காக ரவிச்சந்திரனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கக்கோரி மதுரை சிறை கண்காணிப்பாளருக்கு மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக உள்துறை செயலாளருக்கும் மனு அனுப்பப்பட்டது. இந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரின் மகனுக்கு பரோல் வழங்க மறுத்து மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. கனகராஜ் பிறப்பித்த உத்தரவு நகல் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறியிருந்ததாவது:–
மனுதாரரின் மகன் ரவிச்சந்திரனுக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததன் பேரில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அவர் 28.1.1998 முதல் ஆயுள் தண்டனை சிறைவாசியாக இருந்து வருகிறார். இவருக்கு வழங்கப்பட்ட தண்டனையானது இந்திய அரசின் வயர்லெஸ் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பாஸ்போர்ட் சட்டம் சார்ந்தது.
மத்திய அரசின் அந்த 2 சட்டங்களின்கீழ் இவர் குற்றவாளி என சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. எனவே தமிழ்நாடு தண்டனை நிறுத்தி வைப்பு சட்டத்தின்கீழ் சாதாரண விடுப்பு (பரோல்) பெற ரவிச்சந்திரன் தகுதியற்றவர் ஆவார். இதனால் இவருக்கு சாதாரண விடுப்பு வழங்க மறுத்து உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இருப்பினும் விடுமுறை வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மனுதாரருக்கு உரிமை வழங்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.