தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் கூடுதல் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
விருதுநருக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து கூடுதல் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
விருதுநகர்,
விருதுநகர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. நகரசபை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். இதில் நகரசபை ஆணையாளர் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் கூறியதாவது:–
பாதாளசாக்கடை திட்டபணியினை விரைந்து முடித்து வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதோடு சாக்கடை தொட்டியுள்ள பகுதியில் சாலையினை மேடுபள்ளம் இல்லாமல் சீரமைக்கவேண்டும். காமராஜர் பை–பாஸ் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை பணியினை விரைந்து முடிக்க வேண்டும்.
தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து தினசரி 42 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்க வேண்டிய நிலையில் 25 லட்சம் லிட்டர்குடிநீர்தான் கிடைத்து வருகிறது. உரிய அளவு தண்ணீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வதோடு குறைந்த நாள் இடைவெளியில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். நகரசபை நூற்றாண்டு நிதியில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை தொட்டி கட்டுமான பணியினை துரிதமாக முடிக்க வேண்டியதும் அவசியமாகும்.
துப்புரவு பணியினை தீவிரப்படுத்தி டெங்கு பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுப்பதோடு கழிவு நீர் கால்வாய்கள் மண் மேவி கிடப்பதால் அதனை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.