மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி மஞ்சுவிரட்டு அனுமதியின்றி நடத்தியதாக 10 பேர் மீது வழக்கு

நாடு முழுவதும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதனை அனுமதியின்றி நடத்தியதாக 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2017-08-02 21:45 GMT

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே உள்ள கட்டுக்குடிப்பட்டி கிராமம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் நல்ல மழை பெய்து கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் நிரம்பி விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழ வேண்டியும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆடி மாதம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுக்கு தடை இருந்து வந்ததால் கடந்த சில ஆண்டுகளாக இங்கு மஞ்சுவிரட்டு நடத்தப்படவில்லை.

தடை நீங்கியதை தொடர்ந்து இந்த ஆண்டு ஆடிமாதத்தையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கட்டுக்குடிப்பட்டி மணலி கண்மாயில் வாடிவாசல் அமைக்கப்பட்டு இருந்தது.

முதலில் கோவில் காளைகள் கவுரவப்படுத்தப்பட்ட பின் வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. இதில் 300–க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. இந்த காளைகளை அடக்குவதற்கு 200 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். சுமார் 1,500 பார்வையாளர்கள் இதில் கலந்து கொண்டு மஞ்சுவிரட்டை கண்டுகளித்தனர்.

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் சீறிபாய்ந்து சென்ற சில காளைகளை வீரர்கள் அடக்கினர். சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் சென்றன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்நிலையில் தடையை மீறி இந்த மஞ்சுவிரட்டு நடத்தியதாக இதே கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் உள்பட 10 பேர் மீது புழுதிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்