நெல்லை– திருச்செந்தூர் இடையே நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரெயிலை மீண்டும் இயக்க கோரிக்கை

நெல்லை– திருச்செந்தூர் இடையே நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2017-08-02 20:30 GMT

ஆறுமுகநேரி,

நெல்லை– திருச்செந்தூர் இடையே நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நிறுத்தப்பட்ட ரெயில்கள்

திருச்செந்தூரில் இருந்து தினமும் மாலை 4.30 மணிக்கு நெல்லைக்கு பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56764) புறப்பட்டு சென்றது. பின்னர் இந்த ரெயில் நெல்லையில் இருந்து மாலை 6.40 மணிக்கு திருச்செந்தூருக்கு (வ.எண்.56765) புறப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோவில்பட்டி– நல்லி இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால், கடந்த 1–ந்தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19–ந்தேதி வரையிலும், மேற்கண்ட 2 ரெயில்களையும் (வியாழக்கிழமை தவிர) முழுவதுமாக நிறுத்த தென்னக ரெயில்வே உத்தரவிட்டு உள்ளது.

கோவில்பட்டி– நல்லி இடையே தண்டவாள பராமரிப்பு பணி செய்வதற்கும், நெல்லை– திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயிலை நிறுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது தென்மாவட்டங்களை ரெயில்வே நிர்வாகம் புறக்கணிப்பதையே காட்டுகிறது.

கூட்டத்தால் நிரம்பி வழியும் ரெயில்கள்

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் போன்றவற்றுக்கு திருச்செந்தூர்– நெல்லை பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56764) இணைப்பு ரெயிலாக உள்ளது. இதேபோன்று கோவை– நாகர்கோவில் பாசஞ்சர் ரெயிலுக்கு நெல்லை– திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56765) இணைப்பு ரெயிலாக உள்ளது.

மேலும் இந்த ரெயிலைதான் நெல்லையில் பள்ளிக்கூடம், கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள், ஊழியர்கள், அலுவலர்கள் மாலையில் தங்களது வீடுகளுக்கு திரும்பி செல்ல பயன்படுத்தி வந்தனர். இதனால் மேற்கண்ட ரெயில் 13 பெட்டிகளுடன் இயக்கப்பட்டாலும், எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும்.

மீண்டும் இயக்க கோரிக்கை

பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா வருகிற 12–ந்தேதி தொடங்கி, 12 நாட்கள் நடைபெறும். மேலும் குலசேகரன்பட்டினம் கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். பக்தர்கள் ரெயில் சேவையை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் ரெயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்