திருச்சியில் காவிரி கரையோரம் ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாட்டம் பாதுகாப்பு பணிக்கு போலீசார் குவிப்பு

திருச்சியில் காவிரி கரையோரம் ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடுவதையொட்டி பாதுகாப்பு பணிக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2017-08-02 23:00 GMT

திருச்சி,

ஆண்டுதோறும் ஆடிமாதம் 18–ந் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. காவிரி கரையோர மாவட்டங்களில் இந்த விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இன்று(வியாழக்கிழமை) ஆடிப்பெருக்கு விழாவையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைக்கு ஏராளமான பக்தர்கள் புனிதநீராட குடும்பம், குடும்பமாக வருவார்கள்.

இவர்களில் திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் ஆகவேண்டி சிறப்பு வழிபாடு செய்து, மஞ்சள் நூல் அணிந்து கொள்வார்கள். திருமணமான பெண்கள் தங்களுடைய தாலி கயிற்றை புதிதாக மாற்றி சடங்குகளை செய்வார்கள். புதுமணத்தம்பதிகள் திருமணத்தின்போது, தாங்கள் அணிந்து இருந்த மாலைகளை கொண்டு வந்து காவிரி ஆற்றில் விடுவார்கள். பின்னர் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் மணல் திட்டாகவே காட்சி அளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா களைகட்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும் ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக கடந்த 31–ந் தேதி இரவு மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் நேற்று முன்தினம் மாலை நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் தடுப்பணைக்கு வந்தது. அங்கிருந்து வினாடிக்கு 1,720 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு, நேற்று காலை ஈரோடு மாவட்டம் கொடுமுடியை கடந்து கரூர் மாவட்டம் நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இந்த தண்ணீர் ஆடிப்பெருக்கு முடிந்து 3 நாட்கள் கழித்து தான் திருச்சி மாவட்ட எல்லைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டும், அந்த தண்ணீரை திருச்சி, தஞ்சை மாவட்ட மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி சார்பில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட வரும் பக்தர்களுக்காக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் நீராட வசதியாக காவிரி ஆற்றில் புதிதாக 3 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து தண்ணீரை குழாய்கள் மூலம் கொண்டு சென்று, குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, கழிவறை வசதிகள், மின்விளக்கு வசதிகள் என அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தேங்கி கிடந்த குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆடிப்பெருக்கு விழாவுக்கு வரும் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதற்கு தனியாக குப்பை தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமி‌ஷனர் அருண் உத்தரவின்பேரில், ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் உள்பட பல்வேறு படித்துறைகளில் 415 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு தேவைப்படும் பட்சத்தில் மாம்பழச்சாலையில் இருந்து அம்மாமண்டபம் செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்படலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்