தண்டனை முடிந்து வெளியேவரும் சிறைவாசிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்

‘தண்டனை முடிந்து வெளியே வரும் சிறைவாசிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவேண்டும்’ என்று மாவட்ட நீதிபதி ஆனந்தி பேசினார்.

Update: 2017-08-02 22:00 GMT

வேலூர்,

வேலூர் முன்னாள் சிறைவாசிகள் நலவாழ்வு சங்கத்தில் சிறைக்காவலர்களுக்கான பயிற்சி மற்றும் முன்னாள் சிறைவாசிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. சங்கத்தின் துணைத்தலைவர் விஜயராகவலு தலைமை தாங்கினார். சிறைதுறை அலுவலர்களுக்கான பயிற்சி அகாடமி(ஆப்கா) இயக்குனர் ராஜா, துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சிறைவாசிகள் நலவாழ்வு சங்க செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றார்.

விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘‘சூழ்நிலை காரணமாகத்தான் பெரும்பாலானவர்கள் குற்றம்செய்து கைதிகளாகிறார்கள். அவர்கள் தண்டனைகாலம் முடிந்து சிறையை விட்டு வெளியே வந்தபின்னர் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவேண்டும். அந்த பணியை முன்னாள் சிறைவாசிகள் நலவாழ்வு சங்கத்தினர் செய்துவருகிறார்கள்.

நலத்திட்ட உதவிகள்

சிறை அலுவலர்கள், சிறைவாசிகளிடம் கனிவுடனும், நேர்மையுடனும் நடந்துகொள்ளவேண்டும். விடுதலை பெற்று வெளியேவரும் சிறைவாசிகள் நல்லகுடிமகன்களாக திருந்தி வரவேண்டும்’’ என்றார். அதைத்தொடர்ந்து முன்னாள் சிறைவாசிகள் 2 பேருக்கு நவீன தையல் எந்திரங்கள் மற்றும் ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை ஆகியவற்றை அவர் வழங்கினார்.

பின்னர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 23 சிறைத்துறை காவலர்களுக்கு, சிறையில் கைதிகளிடம் எவ்வாறு நடந்துகொள்வது என்பதுகுறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

முடிவில் பொருளாளர் சீனிவாசன் நன்றிகூறினார்.

மேலும் செய்திகள்