வி.ஐ.டி. பசுமை வேலூர் திட்டத்தில் மரக்கன்று நடும் திட்டம்
வி.ஐ.டி. வேலூர் பசுமை திட்டத்தில், வேலூர் நகரில் மரக்கன்று நடும் திட்டத்தை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.
வேலூர்,
தண்ணீர் தேவைக்காகவும், மழைவளம் பெருகவும், மரக்கன்றுகள் நட்டு பசுமையை ஏற்படுத்தும் வகையிலும், பசுமையின் அவசியம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாலாறு மாசுபடுவதை தடுத்து பாலாற்றின் குடிநீரை பாதுகாக்கவும் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் கடந்த 2008–ம் ஆண்டு வி.ஐ.டி. பசுமை வேலூர் திட்டத்தை தொடங்கியது.இந்த திட்டத்தில் வேலூர் மாநகரில் சாலையோரங்கள், தெருக்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலூரை சுற்றியுள்ள மலைகளிலும் வி.ஐ.டி. மூலமாக ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக வி.ஐ.டி. பல்கலைக்கழகம், இந்தியன் வங்கியுடன் இணைந்து இந்த திட்டத்தின்கீழ் வேலூர் மாநகரில் இந்த ஆண்டு 5 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்க விழா வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று காலை நடந்தது.விழாவுக்கு வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் ரஜினி சந்திரசேகர், ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் எஸ்.ஏ.ராமன் கலந்துகொண்டு மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் குமார், பொறியாளர் பாலசுப்பிரமணியன், இந்தியன் வங்கி உதவி பொது மேலாளர் அருணா, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் அன்பரசு, வெங்கடேஸ்வரா பள்ளி தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.