நீட் தேர்வும் இந்தி மொழிப் பிரச்சினையும்

1965-ம் ஆண்டு தமிழகத்தில் மட்டும் உச்சகட்டத்தில் பற்றி எரிந்த இந்தி திணிப்பு எதிர்ப்பும், கடும் அரிசிப் பஞ்சமும் காங்கிரஸ் ஆட்சியை தூக்கி எறிந்து விட்டு 1967-ல் தி.மு.க.வை ஆட்சியில் அமர வைத்தது.

Update: 2017-08-02 09:00 GMT
1965-ம் ஆண்டு தமிழகத்தில் மட்டும் உச்சகட்டத்தில் பற்றி எரிந்த இந்தி திணிப்பு எதிர்ப்பும், கடும் அரிசிப் பஞ்சமும் காங்கிரஸ் ஆட்சியை தூக்கி எறிந்து விட்டு 1967-ல் தி.மு.க.வை ஆட்சியில் அமர வைத்தது.

எண்ணற்ற இளைஞர்கள் எதிர்கால நலனை எண்ணிப்பார்த்து கருத்தில் கொள்ளாமல், மொழிப்பிரச்சினையில் சிக்கி, ஏதோ ஒரு உத்வேகத்தில் ‘இந்தி ஒழிக’ கோஷத்தை மனதில் பதிய வைத்தார்கள். அதேவேளை ஆங்கில மொழித்திறனையும் மேம்படுத்திக் கொள்ள தவறிவிட்டார்கள்.

இந்தி எதிர்ப்பு போதையில் மூழ்கிய லட்சக்கணக்கான இளைஞர்களில், அப்பொழுது 18 வயதுடைய இந்த எளியவனும் ஒருவன்! மத்திய அரசு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற நான் தற்போது 70 வயதைக்கடந்த நிலையில் சிந்தித்து பார்க்கின்றேன்... ஒரு மொழியை படிப்பதில் அறிந்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? ‘திணிப்பு’ என்ற வழியாகவாவது அந்த மொழியை கற்காமல் விட்டது தற்போது மனக் குறையாகத் தோன்றுகிறது.

“இந்தி மொழி கற்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை, கட்டாயத் திணிப்பைத்தான் கடுமையாக எதிர்க்கின்றோம்” என்கிற அரசியல்வாதிகளின் குடும்பத்து வாரிசுகள், இந்தி மொழியை நன்கு கற்று, மத்திய அரசின் பல உயர் பதவி சுகங்களை அனுபவித்து வருகிறார்கள்.

ஐ.ஏ.எஸ். என்கிற சிவில் சர்வீஸ் பட்டம் பெற்று உறுதிமொழி எடுக்கும்போது, எந்த மொழிச்சார்ந்தவராயினும் தன் பெயரை இந்தி மொழியில் மட்டும் கையொப்பம் இட வேண்டும். இது இங்கிருக்கும் பச்சைத் தமிழ் அரசியல்வாதிகளுக்குத் தெரியும். இந்த இந்தி திணிப்பைப் பற்றி வாய் திறக்காதது ஏன்?

இதேபோல இப்போது ‘நீட்’ பிரச்சினை தலை தூக்கி இருக்கிறது.

தமிழகத்தை தவிர்த்து ‘நீட், நீட்’ என்று காட்டுக் கூச்சல் கத்தி, அரசியல் முகவரிக்காக அய்யோ அம்மா என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்ளும் அரசியல்வாதிகள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

மற்ற மாநிலத்தினர் நீட்டை பற்றி சிறிதும் கவலைப்படாமல், நீட்டாக நுழைவுத் தேர்வு எழுதிவிட்டார்கள்.

நீட் நுழைவுத் தேர்வு குறித்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் தெரிவிக்கப்பட்ட வலுவான கருத்து என்னவெனில், மாநில மொழி பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற நுழைவுத் தேர்விலும் சரி, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படைத் தேர்விலும் சரி, கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற மாணவர்களில் மருத்துவ பட்டப்படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வெறும் 340 பேர்தான். அதாவது ஆண்டுக்கு 34 பேர் மட்டுமே!

மாநில மொழி பாடத்திட்டத்தின் கீழ் படித்த கிராமப்புற மாணவர்களின் வளர்ச்சிக்காக இந்த அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்தார்கள்?

தனியார் பள்ளி கல்லூரிகளில் குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், அந்த பள்ளி கல்லூரி மாணவர்களின் மொழிப் பாடத்திறனை மேம்படுத்தி வருவதைபோல், உயர் சம்பளத்தோடு பலவித ஓய்வூதிய சலுகைகளை அனுபவிக்கும் அரசு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், ஏன் தங்கள் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த முற்படுவதில்லை? ஏன்? எல்லாவற்றிர்க்கும் மூல காரணம், அரசின் செயலற்ற அலட்சியத்தனம்!

பொறியியல் பட்டப்படிப்பிற்கும் நீட் நுழைவுத்தேர்வு அடுத்த ஆண்டில் இருந்து வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிற அதிர்ச்சி செய்தி ஒரு கத்திபோல தமிழக மாணவர்களின் தலை மீது தொங்கிக் கொண்டிருக்கிறது.

இப்பொழுதாவது நிலமையை எச்சரிக்கையுடன் புரிந்து கொண்டு, தமிழக மாநில மொழிப்பாட மாணவர்களின் கல்வித் தரத்தை, தேசிய நுழைவுத் தேர்வுகளை சமாளிக்கும் வண்ணம் மேம்படுத்தினால், எதிர்கால மாணவ சந்ததியினரின் நலனை பாதுகாக்கலாம்.

-அண்ணாநகர் மா.மனோகரன்.

மேலும் செய்திகள்