பெங்களூரு சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் குஜராத் காங். எம்.எல்.ஏ.க்களை சந்திக்க வேட்பாளர் இன்று வருகை

பெங்களூரு சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்திக்க அக்கட்சியின் வேட்பாளர் அகமது பட்டேல் இன்று (புதன்கிழமை) பெங்களூரு வருகிறார்.

Update: 2017-08-01 21:28 GMT
பெங்களூரு,

பெங்களூரு சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்திக்க அக்கட்சியின் வேட்பாளர் அகமது பட்டேல் இன்று (புதன்கிழமை) பெங்களூரு வருகிறார். இதற்கிடையே எம்.எல்.ஏ.க்களின் மடிகேரி பயணம் கைவிடப்பட்டுள்ளது.

சோனியா காந்தியின் அரசியல் செயலாளர்

குஜராத் மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்-சபையில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு வருகிற 8-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் ஆகியோரும் போட்டியிட்டுள்ளனர்.

182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபையில் பா.ஜனதாவுக்கு 116 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 57 எம்.எல்.ஏ.க்களும் இருக்கிறார்கள். இது தவிர குஜராத் பர்வரித்தன் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 எம்.எல்.ஏ.க்களும், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சுயேச்சைக்கு தலா ஒரு உறுப்பினரும் உள்ளனர். இந்த தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற 47 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

44 எம்.எல்.ஏ.க்களை ஒன்று திரட்டி...

அதன்படி பார்த்தால், அந்த மாநில ஆளும் பா.ஜனதா சார்பில் 2 பேரும், காங்கிரஸ் சார்பில் ஒருவரும் வெற்றி பெற முடியும். ஆனால் பா.ஜனதா 3-வது வேட்பாளரை களம் இறக்கியுள்ளது. இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடந்த வாரம் திடீரென பா.ஜனதாவில் சேர்ந்தனர். இதையடுத்து பீதியடைந்த காங்கிரஸ் கட்சி, மீதமுள்ளவர்கள் கட்சி தாவுவதை தடுக்க 44 எம்.எல்.ஏ.க்களை ஒன்று திரட்டி பெங்களூருவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

அவர்கள் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ‘ஈகிள்டன்‘ என்ற தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு கர்நாடக மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த எம்.எல்.ஏ.க்களை ரகசியமாக சந்திக்க குஜராத்தில் இருந்து பா.ஜனதாவை சேர்ந்த ஒரு குழு பெங்களூரு வந்து இருப்பதாகவும், அதனால் அந்த எம்.எல்.ஏ.க்களை மடிகேரிக்கு அழைத்து செல்ல காங்கிரஸ் திட்டமிட்டு இருந்ததாகவும் தகவல் வெளியானது.

வேட்பாளர் அகமது பட்டேல் வருகை


இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், குஜராத் எம்.எல்.ஏ.க்களை இடம் மாற்றுவதால் அதுபற்றிய செய்திகள் ஊடகங்களில் அதிகமாக வெளியாகும் என்றும், இதனால் அவர்களை தற்போது அதே விடுதியிலேயே தொடர்ந்து தங்க வைக்குமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதனால் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மடிகேரிக்கு அழைத்து செல்லும் பயண முடிவை காங்கிரஸ் நிர்வாகிகள் கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே குஜராத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அகமது பட்டேல் இன்று (புதன்கிழமை) பெங்களூரு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் எம்.எல்.ஏ.க்களை நேரில் சந்தித்து பேசுவார் என்று சொல்லப்படுகிறது.

மேலும் செய்திகள்