அரசின் இலவச பொருட்கள் வேண்டாம் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் திட்டவட்டம்
ரேஷன்கடைகள் மூலம் வழங்கப்படும் அரசின் இலவச பொருட்கள் வேண்டாம் என்று பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் கடிதம் கொடுத்தனர்.
புதுச்சேரி,
புதுவையில் அரிசி உள்ளிட்ட இலவச பொருட்களை வழங்க சில நிபந்தனைகளை விதிக்கவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தி உள்ளார். இதன்படி வணிகவரி, வருமானவரி செலுத்துவோர், அரசு அதிகாரிகள், உயர் வருவாய் பிரிவினர்களுக்கு இலவச பொருட்கள் வழங்குவதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுவை அமைச்சரவையும் இத்தகைய முடிவுகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு இலவச பொருட்கள் வேண்டாம் என்று அறிவித்தனர்.
இந்தநிலையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன், செல்வகணபதி மற்றும் பொதுச்செயலாளர்கள் ரவிச்சந்திரன், தங்க.விக்ரமன் ஆகியோர் நேற்று புதுவை குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகத்துக்கு வந்தனர்.
அவர்கள் இயக்குனர் பிரியதர்ஷிணியை சந்தித்து தங்களுக்கு இலவச பொருட்கள் வேண்டாம் என்று கூறி ரேஷன்கார்டு நகலுடன் கடிதம் எழுதி கொடுத்தனர்.
அதன்பின் பாரதீய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–
புதுவையில் கடந்த 50 ஆண்டுகளாக அனைவருக்கும் இலவச பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
அரசு வழங்கும் இலவச திட்டங்களை வசதிபடைத்தோர் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்களும், நிர்வாகிகளும் இலவச பொருட்கள் தேவையில்லை என்று கடிதம் கொடுத்துள்ளோம்.
இதேபோல் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், தொழில் அதிபர்கள் தங்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களை விட்டுத்தர வேண்டும். இதனை கொண்டு தற்போது ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச அரிசியை 50 கிலோவாக உயர்த்தி வழங்கலாம். முதியோர் பென்ஷனையும் உயர்த்தி தரலாம்.
இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.