மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாகக்கூறி ரூ.10½ லட்சம் மோசடி செய்த பெண் கைது
ரூ.10½ லட்சம் மோசடி செய்த சென்னை குரோம்பேட்டை செல்லதங்கத்தை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாம்பரம்,
சென்னை, முகப்பேர் மேற்கு, நொளம்பூர், கோல்டன் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் வில்சன் (வயது 68). ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர். இவர் கடந்த 2015-ம் ஆண்டு தனது மகளை மருத்துவக்கல்லூரியில் சேர்க்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது குமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி கிராமம், பள்ளவிளை, அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வமணி என்பவரது மனைவி செல்லதங்கம் (45) என்பவர், நண்பர் ஒருவர் மூலம் வில்சனுக்கு அறிமுகமானார்.
சென்னை குரோம்பேட்டை பகுதியில் செல்லதங்கத்தை சந்தித்து வில்சன் பேசினார். அப்போது செல்லதங்கம் ரூ.30 லட்சம் தந்தால் தனியார் மருத்துவக்கல்லூரியில் உங்களது மகளை சேர்த்து விடுவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய வில்சன் ரூ.30 லட்சத்தை குரோம்பேட்டை பகுதியில் வைத்து செல்லதங்கத்திடம் கொடுத்துள்ளார். ஆனால் பேசியபடி அவர் மருத்துவக்கல்லூரியில் சேர்த்து விடவில்லை.
இது தொடர்பாக வில்சன், செல்லதங்கத்தை சந்தித்து கேட்டபோது அவர் ரூ.19 லட்சத்து 40 ஆயிரத்தை மட்டும் வில்சனிடம் திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.10 லட்சத்து 60 ஆயிரத்தை நீண்ட நாட்களாக கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து வில்சன் குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லதங்கத்தை தேடி வந்தனர்.
இந்த நிலையில் செல்லதங்கத்தை நேற்று முன்தினம் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.