டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டம்

டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி பொதுமக்கள் சாலையில் பந்தல் அமைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-08-01 23:00 GMT
திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள ஏலாக்குறிச்சி கோவிலூர் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி செங்கராயன் கட்டளை, வாண்டராயன்கட்டளை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதி காரிகள் இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு விரைவில் மாற்றப்படும் என தெரிவித்தனர்.

இந்நிலையில், அந்த டாஸ்மாக் கடை கோவிலூர் சாலையில் உள்ள வயல் பகுதியில் அமைக்கப்பட்டு அங்கு இயங்கி வந்தது. இதனையடுத்து கோவிலூருக்கு செல்ல பஸ்வசதி கிடையாது என்பதால் கோவிலூர், செட்டிக்குழி, சின்னபட்டாகாடு, பெரியபட்டாக்காடு, கீழஎசனை, நரசிங்கபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வயல் பகுதியில் நடந்து செல்வர்.

இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு, மதுகுடிப்பவர்களால் இடையூறு ஏற்படுவதாகவும், நடந்து செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், இதனால் கோவிலூர் சாலையில் உள்ள வயல் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். ஏலாக்குறிச்சியில் 3 இடங்களில் அனுமதியின்றி எந்நேரமும் விற்கப்படும் மதுவிற்பனையை தடைசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் கடை எதிரே உள்ள கோவிலூர் சாலையில் பந்தல் அமைத்து நேற்று கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய துணை செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த டாஸ்மாக் கடை உதவி மேலாளர் பிரகாசம், அரியலூர் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது, ஏற்கனவே ஏலாக்குறிச்சியில் இயங்கி வந்த இந்த டாஸ்மாக் கடையை மாற்ற வலியுறுத்தியதன் பேரில், கோவிலூரில் டாஸ்மாக் கடையை திறக்க மாவட்ட கலெக்டர் அனுமதியளித்தார். இதையடுத்து இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. ஆனால் தற்போது இங்கும் வந்து போராட்டம் நடத்தினால், நீங்கள் கலெக்டரிடம் தான் மனு கொடுக்க வேண்டும். கலெக்டர் வேறு இடம் ஒதுக்கிய பிறகுதான் இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற முடியும். அதற்கு ஒருமாத காலம் ஆகும். அதுவரை இந்த கடை இங்கு தான் செயல்படும்.

எனவே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கலெக்டரிடம் மனு கொடுங்கள், அதுவரை இந்த கடை இங்கு தொடர்ந்து செயல்படும் என தெரிவித்தனர். மேலும், இந்த பகுதியில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதனையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கங்காதுரை, பன்னீர்செல்வம், பேச்சிமுத்து, ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ராமலிங்கம், ராசராசன் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்