"சேதமடைந்த முட்டைகள் குழந்தைகளுக்கு வினியோகிக்கப்படவில்லை" கமல் ரசிகர்கள் குற்றசாட்டுக்கு கலெக்டர் மறுப்பு

பெரம்பலூர் பள்ளிகளில் சேதமடைந்த முட்டைகள் குழந்தைகளுக்கு வினியோகம் செய்யப்படவில்லை என கமல் ரசிகர்கள் கூறிய குற்றசாட்டுக்கு மாவட்ட கலெக்டர் மறுப்பு தெரிவித்தார்.

Update: 2017-08-01 23:00 GMT

பெரம்பலூர்,

தமிழகத்தில் ஊழல் மலிருந்திருப்பதாக ஒரு பேட்டியில் நடிகர் கமலஹாசன் தெரிவித்த கருத்துக்கு, தமிழக அமைச்சர்கள் சிலர் கண்டனம் தெரிவித்திருத்தனர்.

இதையடுத்து தமிழகத்தில் நடக்கும் ஊழல் ஆதாரங்களை திரட்டி அனுப்பி வைக்குமாறு தனது ரசிகர்களுக்கு கமல்ஹாசன் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட கமல் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் சிலர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளில் மறைமுகமாக ஆய்வு செய்தனர். அப்போது ஒரு சில பள்ளிகளில் அழுகிய முட்டைகள் வினியோகம் செய்வதை கண்டுபிடித்து, அதனை புகைப்படம் எடுத்து வைத்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவரிடம் புகார் தெரிவித்ததாக ஒரு தனியார் இணையதளத்தில் நேற்று செய்தி வெளியானது. இதையறிந்த நடிகர் கமல்ஹாசன், பெரம்பலூரில் முட்டை ஊழலை கண்டுபிடித்தது நமக்கு பெருமையே. இதனை நற்பணி இயக்க வழக்கறிஞர்கள் மூலம் சட்ட ரீதியாக சந்திப்போம் என தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் முட்டை ஊழல் புகாரில் குற்றம் சுமத்தப்பட்ட பெரம்பலூர் முத்துநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று மதியம் மாவட்ட கலெக்டர் சாந்தா திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் முட்டைகளை பார்வையிட்டு தரமானதாக இருக்கிறதா? என ஆய்வு செய்தார். மேலும் கமல் ரசிகர்கள் கூறிய புகார் குறித்து சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார். அப்போது, கடந்த சில வாரங்களுக்கு முன்பு சேதமடைந்த முட்டைகளை தனியாக எடுத்து வைத்திருந்தோம். மாறாக அந்த முட்டைகள் குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை. இதனை புகைப்படம் எடுத்து கொண்டு சிலர் தவறாக வதந்திகளை பரப்பியுள்ளனர் என சத்துணவு ஊழியர்கள் பதில் கூறினர். இதே போல் அந்த பள்ளியின் அருகேயுள்ள அங்கன்வாடி மையம் மற்றும் சில பள்ளிகளுக்கும் நேரில் சென்று முட்டைகள் தரமானதாக உள்ளதா என கலெக்டர் ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் சாந்தா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பெரம்பலூர் மாவட்டத்தில் 376 பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் தினமும் 38,283 முட்டைகள் வழங்கப்படுகின்றன. வழக்கமாக திங்கள், வியாழன் கிழமைகளில் முட்டைகள் அந்தந்த பள்ளிகளுக்கே சென்று ஒப்படைக்கப்படுகின்றன. இதனால் பெரும்பாலும் முட்டைகள் கெட்டுபோக வாய்ப்பில்லை. எனினும் முட்டைகளை அவிப்பதற்கு முன்னர் தண்ணீரில் போட்டு சோதனை செய்வர். அப்போது தண்ணீரில் மிதக்கும் கெட்டுபோன முட்டைகளை அப்புறப்படுத்திவிடுவர். இவ்வாறு சோதனை செய்த பின்னரே நல்ல முட்டைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என அனைத்து சத்துணவு அமைப்பாளர் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

முட்டை சேதமானது எப்படி?

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் முட்டை அடுக்கி வைத்திருந்த டிரேயில் மழைநீர் தேங்கியதன் காரணமாக சில முட்டைகள் சேதமடைந்தது. ஆய்வின் போது கண்டறிந்து அதனை தனியாக எடுத்து வைத்து விட்டனர். அது மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. அப்படி இருக்கையில் எதன் அடிப்படையில் கெட்டுப்போன முட்டை பெரம்பலூர் பள்ளியில் வினியோகம் செய்யப்பட்டதாக தகவல் வந்தது என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்