பவானி அருகே போலீஸ் ஏட்டு வி‌ஷம் குடித்து தூக்குப்போட்டு தற்கொலை

பவானி அருகே போலீஸ் ஏட்டு வி‌ஷம் குடித்து, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2017-08-01 22:15 GMT

பவானி,

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சென்னம்பட்டியை சேர்ந்தவர் ரகு (வயது 41). இவருடைய மனைவி தாமரைச்செல்வி (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

ரகு பவானி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். தாமரைச்செல்வி பெருந்தலையூரில் உள்ள நூலகத்தில் வேலை பார்த்து வருகிறார். மனைவி, குழந்தைகளுடன் பவானி காவலர் குடியிருப்பில் ரகு வசித்து வந்தார்.

கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலையும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன்பின்னர் குழந்தைகள் இருவரும் பள்ளிக்கூடங்களுக்கு சென்றுவிட்டனர்.

தாமரைச்செல்வி வெளியூர் செல்லவேண்டி இருந்ததால் பவானி பஸ்நிலையத்துக்கு மோட்டார்சைக்கிளில் ரகு அவரை அழைத்து சென்று விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் உள்பக்கமாக தாழ்போட்டுக்கொண்டார்.

இதற்கிடையே ரகுவின் நண்பர் சக்திவேல் என்பவர் காலை 9 மணி அளவில் செல்போனில் ரகுவை தொடர்பு கொண்டார். மணி ஒலித்துக்கொண்டே இருந்தது ஆனால் அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக்திவேல் அருகே இருக்கும் நண்பர்களை ரகுவின் வீட்டுக்கு சென்றுபார்த்து வரச்சொன்னார். அவர்கள் சென்றுபார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழ்போடப்பட்டு இருந்தது. வெகுநேரம் அவர்கள் அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை. உடனே இதுபற்றி பவானி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததார்கள். அப்போது ரகு துப்பட்டாவால் தூக்குமாட்டி தொங்கிக்கொண்டு இருந்தார். அருகே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலும் கிடந்தது. அதனால் அவர் வி‌ஷம் குடித்துவிட்டு தூக்குப்போட்டுக்கொண்டது தெரியவந்தது. உடனே போலீசார் ரகுவை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரகு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்கள். உடனே உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மனைவுயுடன் ஏற்பட்ட தகராறால் அவர் வி‌ஷம் குடித்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுபற்றி பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த ரகுவின் உடலை பார்த்து அவருடைய மனைவியும், மகன்களும் கதறி அழுதது பார்ப்பவர்களையும் கண்கலங்க செய்தது.

மேலும் செய்திகள்