தூத்துக்குடியில், தனியார் நிறுவன ஊழியர் கொலை: கள்ளக்காதலி கைது

தூத்துக்குடியில், தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கள்ளக்காதலி கைது செய்யப்பட்டார்.

Update: 2017-08-01 20:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில், தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கள்ளக்காதலி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

கார் டிரைவர்

தூத்துக்குடி திரவியபுரம் 4–வது தெருவை சேர்ந்தவர் ஜான்சன்(வயது 54). கார் டிரைவர். இவர் கடந்த 4 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனசேகர் நகர் 3–வது தெருவில் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கும், திரவியபுரத்தை சேர்ந்த ராணிக்கும்(40), கள்ள தொடர்பு இருந்து வந்தது. இதனால் ராணி அடிக்கடி தனசேகர் நகரில் உள்ள ஜான்சனின் வீட்டுக்கு வந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இதற்கிடையே, ராணியுடன் ஏற்கனவே தனியார் நிறுவன ஊழியர் தர்மராஜ்(45) கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். ஜான்சனுடன் ராணி தொடர்பு வைத்து இருப்பதை அறிந்த தர்மராஜ் ஆத்திரமடைந்தார். ராணியுடனான தொடர்பை துண்டிக்குமாறு ஜான்சனை தர்மராஜ் கண்டித்து உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதத்தில் ஜான்சனை தர்மராஜ் கொலை செய்ய முடிவு செய்தார்.

வெட்டி கொலை

இதனால் ஜான்சன், தர்மராஜை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இதற்கு ராணியும் ஒத்துழைத்தார். அதன்படி நேற்று முன்தினம் மாலையில் ஜான்சன் வீட்டுக்கு வந்த ராணி, தர்மராஜை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, தான் தனசேகர் நகரில் இருப்பதாகவும், அங்கு வருமாறு அழைத்து உள்ளார்.

இதனால் தர்மராஜ், ஜான்சன் வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு குளியல் அறையில் பதுங்கி இருந்த ஜான்சன் உள்ளிட்ட 4 பேர் தர்மராஜை அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் ஜான்சன் மட்டும் சிப்காட் போலீசில் சரண் அடைந்தார். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

கள்ளக்காதலி கைது

இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த தர்மராஜின் கள்ளக்காதலி ராணியை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அருண், ராஜேஷ், அகஸ்டின், சரவணன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்