மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை செல்போன் செயலி மூலம் பதிவேற்றம் செய்யும்பணி

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை செல்போன் செயலி மூலம் கணக்கெடுத்து பதிவேற்றம் செய்யும் பணியை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

Update: 2017-08-01 23:00 GMT

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை செல்போன் செயலி மூலம் கணக்கெடுத்து பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை செல்போன் செயலி மூலம் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.

இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை செல்போன் செயலிமூலம் கணக்கெடுத்து பதிவேற்றம் செய்தால் இந்திய தேர்தல் ஆணையம், எந்த மாநிலத்தில் எந்த குடோனில் எவ்வளவு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளது என்பதை துல்லியமாக தேசிய அளவில் கண்காணிக்க முடியும்.

வேலூர் மாவட்டத்தில் வேலூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் டோல்கேட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் இருக்கும் குடோன்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இங்குள்ளது.

ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள குடோனில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை செல்போன் செயலிமூலம் கணக்கெடுத்து பதிவேற்றம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக கலெக்டர் ராமன் முன்னிலையில் குடோனுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து செல்போன் செயலி மூலம் கணக்கெடுத்து பதிவேற்றம் செய்யும் பணியை கலெக்டர் தொடங்கிவைத்தார். இந்த பணி தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், தேர்தல் தாசில்தார் சச்சிதானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்