வீடு கட்டித்தருவதாக ரூ.38 லட்சம் மோசடி தொண்டு நிறுவனத்தினர் மீது புகார்

வீடு கட்டித்தருவதாக கூறி தொண்டு நிறுவனத்தினர் ரூ.38 லட்சம் மோசடி செய்ததாக பொதுமக்கள் திரண்டு வந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.

Update: 2017-08-01 06:30 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி இந்திராநகர் 1-வது வார்டு பகுதியை சேர்ந்த வையாபுரி என்பவர் தலைமையில் 75-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.

பின்னர் அங்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் வையாபுரி கூறி இருப்பதாவது:-

தம்மம்பட்டி காந்திநகரை சேர்ந்த போதகர் மற்றும் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த தொண்டு நிறுவனம் நடத்தி வரும் 2 பேருடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. அப்போது தொண்டு நிறுவனத்தினர், என்னிடம் ஏழை, எளிய மக்களுக்கு ரூ.5 லட்சத்தில் 7 மாதத்தில் தார்சு வீடு கட்டி தருவதாகவும் அதற்கு முன்பணமாக ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

இதை நம்பி, கெங்கவல்லியில் வசிக்கும் எனது உறவினர்கள், அறிமுகமான மக்கள் என 94 பேரிடம் ரூ.38 லட்சத்து 10 ஆயிரம் எனது பொறுப்பில் வாங்கி கடந்த ஆண்டு (2016) ஜூலை 8-ந் தேதி கொடுத்தேன். ஓராண்டுக்கு மேலாகியும் வீடு கட்ட எவ்வித முயற்சியும் எடுக்காததால் அவர்கள் மோசடியில் ஈடுபட்டதை உணர்ந்தேன். என் மூலம் பணம் கொடுத்தவர்கள், திரும்ப பணத்தை கேட்க தொடங்கினர். நெருக்கடி தாங்காமல், அந்த மூவரிடமும் பலமுறை நேரில் சென்று முறையிட்டு கட்டிய பணத்தையாவது திரும்ப கொடுங்கள் என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், நாங்கள் தரும்போதுதான் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் உன்னையும், உன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டி வருகிறார்கள். எனவே, மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் சூப்பிரண்டு சந்திரசேகரன் உறுதி அளித்தார். அந்த புகார் மனு மீது மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல எடப்பாடி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி ஆவணிப்பேரூர் கீழ்முகம் கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-

எடப்பாடி அருகே வெள்ளாண்டிவலசு காந்திநகரை சேர்ந்த கணவன், மனைவி மாத ஏலச்சீட்டு, வாரச்சீட்டு, ஆடிமாத சீட்டு, தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர். 300-க்கும் மேற்பட்டவர்கள் மாத சீட்டுக்காக தலா ரூ.1 லட்சம் வரை செலுத்தினோம். சீட்டு முடிந்தும் அதற்கான பணத்தை தரவில்லை. ரூ.1 கோடிக்கும் மேல், உரியவர்களுக்கு பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த மாதம் 17-ந் தேதி அந்த தம்பதி வீட்டை காலி செய்து விட்டு குடும்பத்துடன் தலைமறைவாகினர். எனவே, அத்தம்பதியை கண்டுபிடித்து எங்களது சீட்டு பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்