குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

திருவாரூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-07-31 23:00 GMT
திருவாரூர்,

கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்தரக்குடி ஊராட்சிக்குட்பட்ட கீழ ஒட்டகுடி, மேலபுலியூர், வடக்குவெளி ஆகிய கிராமங்களுக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை. இதனால் குடிக்க தண்ணீரின்றி கிராம மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இதில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலிக் குடங்களுடன் திருவாரூர் அருகே மேம்பலம் கடைவீதியில் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், இன்ஸ்பெக்டர்கள் ராஜகோபால், ராஜா, தாசில்தார் அம்பிகாபதி, வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் குடிநீர் தட்டுபாடின்றி வழங்க வேண்டும். சாலை மற்றும் மின் விளக்கு ஆகிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் திருவாரூர்-மன்னார்குடி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட உச்சுவாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று கூறியும், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக்கோரியும் உச்சுவாடி கிராம மக்கள் நேற்று உச்சுவாடி பிள்ளையார் கோவில் பாலம் முன்பு காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் கேட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி ஒன்றிய ஆணையர் கமலராஜன், வடபாதிமங்கலம் வருவாய் ஆய்வாளர் பிரதிபா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு அங்கிருந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் வடபாதிமங்கலம்-கூத்தாநல்லூர் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்