கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு உணவகத்தில் குக்கர் வெடித்து சிதறியது ஊழியர் படுகாயம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உணவகத்தில் குக்கர் வெடித்து சிதறியது. இதில் அரசு ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2017-07-31 23:00 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை வேங்கிக்காலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இந்த கலெக்டர் அலுவலக வளாகத்தில் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி மூலம் டீத்தூள், காபி தூள் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடையும், புதுவாழ்வு திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவால் நடத்தப்படும் பாரம்பரிய உணவகமும், ஆவின் பாலகமும் உள்ளது.

இந்த நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

நண்பகல் 12 மணியளவில் மகளிர் சுய உதவிக்குழுவால் நடத்தப்படும் உணவகத்தில் பயிறு அவிப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த குக்கர் திடீரென வெடித்து சிதறியது. அப்போது குக்கரின் மூடி உணவகத்தின் அருகில் நின்று கொண்டிருந்த அரசு ஊழியர் விஜயகுமார் என்பவரின் தலையில் பட்டது.

இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. எனினும் அந்த உணவகத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் எந்தவித பாதிப்புமின்றி தப்பினர். கடை முழுவதும் பயிறு சிதறி கிடந்தது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 20 நிமிடத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் அங்கு வராததால், போலீசார் காயம் அடைந்தவரை மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்