திருச்சியில் விடுதி மாணவர்கள் தர்ணா போராட்டம் உணவு சரியில்லை என புகார்

உணவு சரியில்லை என்று கூறி திருச்சியில் விடுதி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-07-31 23:00 GMT
திருச்சி,

திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் அண்ணா விளையாட்டு மைதானம் அருகே அம்பேத்கர் அரசு மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 250 மாணவர்கள் தங்கி பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று காலை விடுதியில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. ஆனால் அந்த உணவு சரியில்லை என்று கூறி அந்த பாத்திரங்களை தூக்கி கொண்டு மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியே வந்தனர்.

பின்னர் அவர்கள் விடுதி வாசலில் பாத்திரத்துடன் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விடுதி வார்டன் பாஸ்கர் மாணவர்களை சமாதானப்படுத்தினார். ஆனால், அதனை மாணவர்கள் ஏற்க மறுத்து தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் பியூலா அங்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவர்கள், காலஅட்டவணைப்படி தங்களுக்கு உணவு வழங்குவது இல்லை என்றும், வழங்கப்படுகிற உணவும் சரியாக இருப்பதில்லை என்றும் புகார் கூறினார்கள். மேலும், விடுதியில் பல்வேறு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் பியூலா உறுதி அளித்தார். மேலும், மாணவர்களுக்கு வேறு சாப்பாடு தயாரித்து வழங்கவும் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்