குடிநீர் வரியை தள்ளுபடி செய்யக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட செல்லையாநகர், சேங்கைதோப்பு ஆகிய பகுதியில் குடிநீர் வரியை ரத்து செய்யக்கோரி நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2017-07-31 22:45 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது நகர பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் கொடுத்த மனுவில், நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதைப்போல தெரு விளக்குகள் சரி வர எரியவில்லை. இதற்கு தகுந்த நட வடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.

குடிநீர் வரி தள்ளுபடி

கூட்டத்தில் புதுக்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் நைனாமுகமது தலைமையில் 41-வது வார்டு சேங்கை தோப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், 41-வது வார்டுக்கு உட்பட்ட செல்லையா நகர், சேங்கைதோப்பு ஆகிய பகுதிகளில் கடந்த 10 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் எங்களுக்கு குடிநீர் வினியோகம் சரிவர செய்து வந்த நகராட்சி தண்ணீர் லாரியும் தற்போது வருவதில்லை. மேலும் எங்கள் பகுதியில் தெருவிளக்குகளும் எரியவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு உள்ள குடிநீர் வரியை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் உடனடியாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும்

கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் கும்பகுடி ஆதிதிராவிடர் பொதுமக்கள் கொடுத்த மனுவில், கும்பகுடி பகுதியில் ஆதிதிராவிடர் 400 பேர் வசித்து வருகின்றோம். எனவே கிராம நிர்வாகம், ஊராட்சியில் ஆதிதிராவிடர் மக்களுக்கு புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் பகுதிகளில் உள்ள தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும், என கூறியிருந்தனர்.

ஊதியம் வழங்க

கூட்டத்தில் அறந்தாங்கி ஒன்றியம் மேற்பனைகாடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், மேற்பனைகாடு ஊராட்சி பகுதியில் 100 நாள் வேலை திட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகிறோம். இந்த நிலையில் 22 பேருக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள எங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்பதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே கலெக்டர் நடவடிக்கை எடுத்து 22 பேருக்கும் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்