விமான நிலைய விரிவாக்கத்திற்கு விவசாய நிலத்தை கையகப்படுத்தக்கூடாது கலெக்டரிடம் கோரிக்கை

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக விவசாய நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என்று மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ.தலைமையில் கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2017-07-31 23:00 GMT
திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்கள். அப்போது திருவெறும்பூர் தாலுகா கிழக்குறிச்சி, கீழகல்கண்டார் கோட்டை மற்றும் கொட்டப்பட்டு வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திருவெறும்பூர் எம்.எல்.ஏ. மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திரண்டு வந்து கலெக்டர் ராஜாமணியை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

நத்தமாடிப்பட்டி, கிழக் குறிச்சி, கீழகல்கண்டார் கோட்டை மற்றும் கொட்டப்பட்டு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் உய்யகொண்டான் வாய்க்கால் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. விவசாயத்தை நம்பி தான் எங்கள் வாழ்வாதாரம் இருக்கிறது. வேறு தொழில் எதுவும் கிடையாது. இந்நிலையில் எங்கள் கிராமங்களை சேர்ந்த சுமார் 200 நபர்களின் நன்செய் நிலங்களை திருச்சி விமான நிலையம் விரிவாக்கம் செய்வதற்காக கையகப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்வதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிவிப்பில், நன்செய் நிலம் என்பதை மறைத்து தரிசு நிலம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. நாங்கள் நன்செய் தீர்வை தான் அரசுக்கு செலுத்தி வருகிறோம். விமான நிலைய விரிவாக்கத்திற்காக எங்கள் நிலத்தை கையகப்படுத்துவது விவசாயிகளின் உரிமையை பறிக்கும் செயல் ஆகும். எனவே எங்கள் நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்து செய்ய உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


மனு கொடுத்த பின்னர் வெளியே வந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. இந்த பிரச்சினை தொடர்பாக 2 நாட்கள் கழித்து தனியாக வந்து பேசும்படி கலெக்டர் கூறியதாக தெரிவித்தார். மேலும் அனைத்து தரப்பு மக்களும் விமான நிலைய விரிவாக்கத்தினால் பாதிக்கப்படுவார்கள் என்பதால் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

கிராம பொதுமக்கள் கூறுகையில் விமான நிலைய ஓடு பாதை விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கான நோட்டீசை வீடு தோறும் கொடுத்து இருக்கிறார்கள். இதனால் சுமார் 1000 வீடுகள் இடிக்கப்படும் அபாயம் உள்ளது. எங்கள் கிராமத்திற்கு செல்லும் சாலைகளும் காணாமல் போய்விடும். எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் வாழ்வாதாரத்தை அழிய விடாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

திருச்சி மாவட்ட மினி வேன் ஓட்டுனர் சங்கத்தினர் அதன் தலைவர் சந்திரசேகர் தலைமையில் வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் திருச்சி மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மினிவேன்கள் ஓடுகின்றன. கம்பி, ஜல்லி, செங்கல், உள்ளிட்ட கட்டிட கட்டுமான பொருட்களை ஏற்றி செல்வது தான் எங்களது முக்கிய வேலையாகும். வல்லம் அருகே நடந்த விபத்தை காரணம் காட்டி கம்பி ஏற்றி செல்ல போலீசார் அனுமதிப்பதே இல்லை. ரூ.2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கிறார்கள். இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக எங்களது வாகனங்கள் ஓட்டம் இல்லாமல் முடங்கி கிடக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நாங்கள் வாகனம் ஓட்டுவதற்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த பரமசிவம் என்பவர் கொடுத்த மனுவில் நான் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் சிறிது காலம் தங்கி இருந்தேன். அப்போது சிலர், பிச்சைக்காரர்கள் மற்றும் பெண்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி விபசாரத்தில் ஈடுபடுத்துவதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டு பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது. 

மேலும் செய்திகள்