16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை,
சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் பள்ளிகல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு தேர்வு பணிகள் அனைத்தையும் தேர்வுத்துறையின் மண்டல அலுவலகம் மூலம் நிறைவேற்ற வேண்டும்.
இளநிலை உதவியாளர் பதவியில் இருந்து உதவியாளர் பதவி உயர்விற்கு தகுதியானவர்கள் இல்லாத போது மட்டுமே அரசு பணிகள் தேர்வாணையத்தின் மூலம் நேரடி உதவியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். துணை இயக்குனர், இணை இயக்குனர் பணியிடங்களை அறிவித்து உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். கண்காணிப்பாளர் பணியிடங்கள் சார்பாக முன்னுரிமை பட்டியலை உடனே வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும். மூத்த, இளையோர் ஊதிய முரண்பாடுகளை சமன்செய்யும் கோப்புக்களை காலதாமதம் செய்யாமல் உடனுக்குடன் உரிய ஆணைகளை வழங்க வேண்டும்.
இளநிலை உதவியாளர்களுக்கு உயர்கல்விக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வை தொடர்ந்து வழங்க வேண்டும். ஒரே அலுவலகத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் பணியாளர்களை சுழற்சி முறையில் அருகில் உள்ள இதர அலுவலகங்களுக்கு பணி மாறுதல் செய்ய வேண்டும். அமைச்சு பணியாளர்களுக்கு 2 சதவீதம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை வழங்க வேண்டும் என்பது உள்பட 16 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் சரவணன், கண்ணன், ரமேஷ் மற்றும் மாவட்ட செயலாளர் கந்தசாமி, நிர்வாகிகள் ரவி, முருகன், சபரிநாதன், தர்மலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிவில் கோரிக்கைகளை வலியுறுத்தி முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.