ஆங்கில ஆதிக்கம்

ஆங்கில மொழி உலகமொழியான பிறகு இதுவரைக்கும் 247 மொழிகள் அழிந்து இருக்கின்றன. ஆங்கில மொழி அவ்வளவு சக்தி படைத்ததாக இருக்கிறது.

Update: 2017-07-31 10:30 GMT
ங்கில மொழி உலகமொழியான பிறகு இதுவரைக்கும் 247 மொழிகள் அழிந்து இருக்கின்றன. ஆங்கில மொழி அவ்வளவு சக்தி படைத்ததாக இருக்கிறது. ஒருநாளைக்கு நாம் பேசும் தமிழ் மொழியில் நமக்கே தெரியாமல் எத்தனை ஆங்கிலச் சொற்களை கலந்து பேசுகிறோம். டுமாரோ, ஆக்சுவலி, பட், சண்டே, மார்னிங், ஈவ்னிங்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இப்படித்தான் ஒவ்வொரு மொழியிலும் ஆங்கிலம் ஊடுருவி இருக்கிறது. இன்னும் 50 ஆண்டுகளில் முழுமையாக ஆங்கிலம் ஊடுருவி விடும். காரணம், இன்றைய தமிழர்கள் ஆங்கில மோகத்தில் தான் இருக்கிறார்கள், தமிழ் மொழிமேல் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. தங்கள் குழந்தைகளை ஆங்கில வழியில் தான் படிக்க வைக்கிறார்கள். 50 ஆண்டுகளில் முழுமையாக ஆங்கிலம் தமிழில் ஊடுருவி விடும் என்கிறது, ஓர் ஆய்வு.

சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் “மரியா ஸ்மித் ஜோனெஸ்” என்ற பெண்மணி இறந்தார். அவர் இறந்து போகும் போது, ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான “ஏயக்” என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தான் இருந்தார். அவர் இறந்த பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது. அவர் இறந்த தினத்தோடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே “ஏயக்” மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரிகமானதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள்

இரண்டு வாரத்திற்கு ஒரு முறை, உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றார்கள். ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டு இருக்கின்றது என்பது அபாயகரமான செய்தி. இன்றைய சந்ததியினரும், அடுத்த சந்ததியினரும் தமிழை படிக்கவோ, எழுதவோ, ஆர்வம் காட்டுவதில்லை. தற்போது எல்லாம் ஆங்கில மோகத்தில் போய்க்கொண்டு இருக்கிறார்கள். ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்கள் பேசுகின்ற மொழியை அழித்து விடுங்கள் அந்த இனம் தானாக அழிந்துவிடும் என்பார்கள்.

எனவே தமிழில் பேசுவதும் எழுதுவதும் சிந்திப்பதும் தமிழ் மொழியை அழிவில் இருந்து காப்பாற்றும். இதுபற்றி இளைய தலைமுறையினர் சிந்திக்கவேண்டும். மம்மி-டாடிகள், அம்மா- அப்பாவாக இருப்பதே பெருமை என்பதை உணர வேண்டும்.

மேலும் செய்திகள்