செங்கம் பஸ் நிலையத்தில் குடிமகன்களின் புகலிடமானது பெண்கள் பாலூட்டும் அறை
செங்கம் புதியபஸ்நிலையத்தில் கட்டப்பட்டுள்ள பெண்கள் பாலூட்டும் அறை குடிகாரர்களின் புகலிடமாக மாறிவருவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கம்,
செங்கம் புதியபஸ்நிலையத்தில் கட்டப்பட்டுள்ள பெண்கள் பாலூட்டும் அறை குடிகாரர்களின் புகலிடமாக மாறிவருவதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பஸ்நிலையங்களில், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக தனியாக பாலூட்டும் அறைகளை தமிழக அரசு கட்டிக்கொடுத்தது. செங்கம் புதிய பஸ் நிலையத்திலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பெண்கள் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டது.இந்த பாலூட்டும் அறையில் சமூக விரோதிகள் சிலர் மது குடித்துவருகிறார்கள். மேலும் மதுகுடித்துவிட்டு மதுபாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர். சிலர் குடிபோதையில் பாலூட்டும் அறையிலேயே படுத்து தூங்குவதாகவும் பெண்கள் புகார் கூறுகின்றனர்.
கைக்குழந்தைகளை வைத்திருக்கும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு மறைவாக சென்று பாலூட்டுவதற்காக கட்டப்பட்ட அறை குடிகாரர்களின் புகலிடமாக மாறிவிட்டது. மேலும் புதிய பஸ் நிலையத்தில் பணிபுரியும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களும் அந்த அறையில் ஓய்வெடுக்கிறார்கள்.இதனால் செங்கம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள பெண்கள் பாலூட்டும் அறைக்கு செல்ல பெண்கள் அஞ்சுகின்றனர். எனவே, இது குறித்து செங்கம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அங்கு மதுகுடிக்கும் குடிகாரர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.