மூளைச்சாவு அடைந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உடல் உறுப்புகள் தானம்
சென்னை ராயபுரம் கிளைவ் பேட்டரி பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம்(வயது 65).
ராயபுரம்,
சென்னை ராயபுரம் கிளைவ் பேட்டரி பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம்(வயது 65). தங்கசாலையில் உள்ள அரசு அச்சகத்தில் பணியாற்றிய இவர், தற்போது ஓய்வு பெற்று விட்டார். இவருக்கு ராஜேஸ்வரி(63) என்ற மனைவியும், 4 மகன்கள், 3 மகள்களும் உள்ளனர்.
கடந்த 27–ந்தேதி வீட்டின் படிக்கட்டில் தவறி விழுந்த ஏகாம்பரத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஏகாம்பரம், நேற்றுமுன்தினம் மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் சிலர் பயன் அடைவார்கள் என அவரது குடும்பத்தாருக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர். அதை ஏற்று ஏகாம்பரத்தின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவருடைய குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து டாக்டர்கள், அறுவை சிகிச்சை மூலம் ஏகாம்பரம் உடலில் இருந்து இதயம், கண், கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உறுப்புகளை தானமாக பிரித்து எடுத்தனர். அந்த உடல் உறுப்புகள் தேவைப்படுவோருக்கு பொருத்தப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.