கடலூர், நாகை மாவட்ட விவசாயிகளை பாதிக்கும் ‘பெட்ரோலிய கெமிக்கல்’ திட்டத்தை செயல்படுத்தக்கூடாது

கடலூர், நாகை மாவட்ட விவசாயிகளை பாதிக்கும் ‘பெட்ரோலிய கெமிக்கல்’ திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று விருத்தாசலத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

Update: 2017-07-30 23:30 GMT

விருத்தாசலம்,

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. இதனை அவசர பிரச்சினையாக கருதி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். விவசாயிகளின் வங்கி கடன்களை மத்திய, மாநில அரசுகள் ரத்துசெய்ய வேண்டும்.

தமிழகத்தில் ஆட்சியாளர்கள் 30 வருடமாக நீர்நிலைகளை முறையாக பராமரிக்காததால் தண்ணீர் தட்டுப்பாடு பஞ்சமாக மாறியுள்ளது. இதற்கு தீர்வு காண அண்டை மாநிலத்தில் இருந்து குடிநீர் கொண்டு வர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் வீணாக கடலில் சென்று கலக்கும் நீரை சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் சேகரிப்புத்திட்டத்தை கட்டாயப்படுத்த வேண்டும்.

‘நீட்’ தேர்வில் இருந்து நிரந்தர விலக்குப்பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் தயங்குகிறது. தமிழகத்தில் விவசாயத்திற்கும், தண்ணீருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஓ.என்.ஜி.சி, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்கள் சுற்றுசூழல் பாதிப்பதற்கு எடுத்துக்காட்டு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால் மக்களுக்கு வேண்டாத திட்டத்தினை மத்திய அரசு திணித்து வருகிறது.

ரஜினி அரசியலுக்கு வந்தால் த.மா.கா வரவேற்கும். இதில் மாற்றுக்கருத்து கிடையாது. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஜனநாயகத்தில் அரசியலுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது. தமிழகத்தில் அ.தி.மு.க. அரசின் செயல்பாடு சரியாக இல்லை.

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்து அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டியது நிர்வாகத்தின் கடமையாகும். தமிழக அரசு அந்த ஊழியர்களுக்கு துணை நிற்க வேண்டும். அவர்களுடைய கோரிக்கை நிறைவேற த.மா.கா துணை நிற்கும்.

கடலூர், நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய 49 கிராமங்கள் ‘பெட்ரோலிய கெமிக்கல்’ மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் இத்திட்டத்தை தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி அந்த பகுதி மக்களுடன் இணைந்து நின்று 100 சதவீதம் எதிர்க்கிறது. வாழ்வாதாரத்தை பாதிக்கும் இத்திட்டத்தை அங்கே செயல்படுத்த கூடாது.

தொழில் நகரங்களில் சுற்றுச்சூழல் பாதிப்படைந்த பகுதியாக கடலூர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் சிப்காட் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலைகள். நீர், நிலம், காற்று ஆகியவை மாசடைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றது. பல முறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் அரசு மவுனம் சாதித்து வருகிறது. தொழிற்சாலை கழிவுநீர் கடலில் கலப்பதால் கடல் வளம் பாதிக்கப்பட்டு மீன் பிடி தொழிலும் பாதிக்கப்படுகிறது. எனவே அரசு தொழிற்சாலைகளில் மாசுக்கட்டுப்பாட்டை முறையாக கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்துல்கலாம் சாதி, மதம், இனம், மொழிகளுக்கு அப்பாற்பட்டவர், தேச ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர். எனவே அவருடைய நினைவிடத்தில் பகவத்கீதை, பைபிள், குரான் ஆகிய 3 நூல்களும் இருப்பது 100 சதவீதம் அவருடைய வாழ்க்கை முறைக்கு சரியான முறையாக இருக்கும் என கருத்து கூறினேன். அதன் அடிப்படையில் அவருடைய வீட்டில் உள்ளவர்கள் பகவத் கீதையுடன், பைபிளையும், குரானையும் அப்துல்கலாம் நினைவிடத்தில் வைத்திருப்பது பாராட்டுக்குரியது.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். அப்துல்கலாம் தான் செல்லும் இடங்களில் எல்லாம் திருக்குறளைப் பற்றி பெருமையாக குறிப்பிடுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மங்கலம்பேட்டைக்கு வந்த த.மா.கா தலைவர் ஜி.கே. வாசனுக்கு வட்டார தலைவர் ராமராஜன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், நகர தலைவர் அசோக்குமார், மாவட்ட வர்த்தக பிரிவு பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்