கேரள மாநிலம் பாலருவியில் குளிக்க சென்ற தமிழக சுற்றுலா பயணி மீது தாக்குதல்

கேரள மாநிலம் பாலருவியில் குளிக்க சென்ற தமிழக சுற்றுலா பயணியை வனத்துறையினர் தாக்கினர். இதை கண்டித்து வனத்துறையினரிடம் சுற்றுலா பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-07-30 23:30 GMT

செங்கோட்டை,

கேரள மாநிலம் பாலருவியில் குளிக்க சென்ற தமிழக சுற்றுலா பயணியை வனத்துறையினர் தாக்கினர். இதை கண்டித்து வனத்துறையினரிடம் சுற்றுலா பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக சாரல் மழை இல்லாததால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். இதனால் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்துச் சென்றனர்.

மேலும் இங்கு குளித்து முடித்த சுற்றுலா பயணிகள் அருகில் உள்ள கேரள மாநிலம் ஆரியங்காவு பாலருவி நோக்கி கார், வேன், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் படையெடுத்தனர். இந்த அருவியில் ஒரு நபர் குளிக்க கட்டணமாக ரூ.40 வசூலிக்கப்படுகிறது.

நேற்று காலையில் இருந்தே பாலருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியதால் தமிழகத்தில் இருந்து செல்லும் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து, வனத்துறை சார்பில் இயக்கப்படும் பஸ்களில் சென்று பாலருவியில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

இதனால் ஆத்திரமடைந்த மதுரை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் அங்குள்ள வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே அவரை கேரள வனத்துறையினர் அடித்து உதைத்து வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அங்கு திரண்டிருந்த ஏராளமான தமிழக சுற்றுலா பயணிகள் அனைவரும் கேரள வனத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த சுற்றுலா பயணியை வனத்துறையினர் தென்மலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாலருவியில் குளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மேலும் செய்திகள்