தென்னை மரம் தலையில் விழுந்து மொபட்டில் சென்ற பூசாரி சாவு

அம்மாபேட்டை அருகே தென்னை மரம் தலையில் விழுந்து மொபட்டில் சென்ற பூசாரி பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-07-22 22:00 GMT

அம்மாபேட்டை,

அம்மாபேட்டை அருகே உள்ள சுந்தராம்பாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 55). அவருடைய மனைவி பராசக்தி. மகன் கிருஷ்ணமூர்த்தி. மாரியப்பன் அந்த பகுதியில் உள்ள ஒரு மாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்தார். மேலும் சமையல் வேலைக்கும் சென்று வந்தார்.

மாரியப்பனின் மகன் கிருஷ்ணகுமார் திருமணமாகி பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் பெங்களூரில் இருந்து கிருஷ்ணகுமார் நேற்று அம்மாபேட்டை வந்தார். அவரை மொபட்டில் சென்று சுந்தராம்பாளையத்துக்கு மாரியப்பன் அழைத்து வந்தார். பின்னர் கால்நடைகளுக்கு தீவனம் கொண்டு வருவதற்காக அந்த பகுதியில் உள்ள செங்காட்டுக்கு மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.

செங்காடு செல்லும் வழியில் பி.கே.பி. என்பவருடைய தோட்டம் அமைந்துள்ள பகுதியில் மாரியப்பன் சென்றுகொண்டு இருந்தபோது, தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களை தொழிலாளர்கள் சிலர் வெட்டிக்கொண்டு இருந்தார்கள். அப்போது வெட்டப்பட்டுக்கொண்டு இருந்த ஒரு தென்னை மரம் திடீரென மொபட்டில் சென்றுகொண்டு இருந்த மாரியப்பன் மீது விழுந்தது. இதில் தலை நசுங்கி, கால் துண்டாகி மாரியப்பன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தார்கள்.

மேலும் வழக்குப்பதிவு செய்து, தென்னை மரங்களை ஆட்கள் வைத்து வெட்டிக்கொண்டு இருந்த சுந்தராம்பாளையத்தை சேர்ந்த சேட்டு என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த மாரியப்பனின் உடலை பார்த்து அவருடைய மனைவி பராசக்தியும், மகன் கிருஷ்ணமூர்த்தியும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்