மருத்துவ படிப்பிற்கான சென்டாக் கலந்தாய்வு: பெரும்பாலான மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தனர்
புதுவையில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் கலந்தாய்வு தொடங்கியது. இதில் கலந்து கொண்ட பெரும்பாலான மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியையே தேர்வு செய்தனர்.
காலாப்பட்டு,
புதுவை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் சென்டாக் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு புதுவையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் 128 இடங்களும், 3 சுயநிதிக்கல்லூரிகளில் இருந்து தலா 55 இடங்களும் என மொத்தம் 293 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களை நிரப்புவதற்கான சென்டாக் கலந்தாய்வு நேற்று மதியம் 12 மணிக்கு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் தொடங்கியது. முதலில் சுதந்திர போராட்ட வீரர்களின் இடஒதுக்கீட்டு பிரிவுக்கான கலந்தாய்வு நடந்தது. தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது.
இதில், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான பிரிவில் முதலாவதாக கலந்து கொண்ட மாணவி ஸ்ரீஜா அரசு மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தார். 2–வதாக கலந்து கொண்ட மாணவர் ஜோதி கணேசன், 3–வதாக வந்த மாணவி மலர்விழி ஆகியோரும் அரசு மருத்துவக் கல்லூரியையே தேர்வு செய்தனர். தொடர்ந்து கலந்து கொண்ட மற்ற மாணவ–மாணவிகள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தனர்.
அவர்களுக்கான சேர்க்கை ஆணையை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு, கன்வீனர் கோவிந்தராஜூலு ஆகியோர் வழங்கினர். வங்கிகளுக்கு நேற்று (சனிக்கிழமை) விடுமுறை என்பதால் ரொக்கமாக பணம் பெற்று கொள்ளப்பட்டது.
தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு பொதுக் கலந்தாய்வு தொடங்கியது. இதில் கலந்து கொள்ள நீட் தேர்வின் அடிப்படையில் 567 மதிப்பெண்கள் முதல் 319 மதிப்பெண்கள் வரை பெற்றிருந்த 99 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் 50 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தனர்.
தொடர்ந்து 3 மணிக்கு நடைபெற்ற கலந்தாய்வில் 318 மதிப்பெண்கள் முதல் 256 மதிப்பெண்கள் வரை பெற்றிருந்த 101 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தனர்.
மாலை 4 மணிக்கு நடைபெற்ற கலந்தாய்வில் 254 மதிப்பெண்கள் முதல் 226 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ள 102 பேர் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தனர். அவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. இதில் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள பெரும்பாலான இடங்கள் நிரம்பின.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2–வது நாள் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் காலை 9 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள நீட் தேர்வில் 225 மதிப்பெண்கள் முதல் 201 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ள 106 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள 200 மதிப்பெண்கள் முதல் 184 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ள 97 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள 183 மதிப்பெண்கள் முதல் 169 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ள 98 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பகல் 12 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் 168 மதிப்பெண்கள் முதல் 158 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ள 101 பேரும், பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் 157 மதிப்பெண்கள் முதல் 147 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ள 97 பேரும் பங்கேற்க உள்ளனர். மாலை 3 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் 146 மதிப்பெண்கள் முதல் 139 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ள 111 பேரும், மாலை 4 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் 138 மதிப்பெண்கள் முதல் 131 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ள 102 பேரும் கலந்து கொள்கின்றனர்.