பந்தலூர் தாலுகாவில் ஆதிவாசி கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு

பந்தலூர் தாலுகா ஆதிவாசிகள் கிராமங்களில் அடிப்படை வசதிகள் உள்ளதா? என்று ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

Update: 2017-07-22 22:00 GMT

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே வட்டக்கொல்லி, கோட்டப்பாடி, முருக்கம்பாடி, கருத்தாடு போன்ற ஆதிவாசிகள் கிராமங்கள் உள்ளன. இங்கு தொகுப்பு வீடுகள், தெருவிளக்கு, நடைப்பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? என்று ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளிக்க மாவட்ட கலெக்டர் இன்னசென்ட்திவ்யா உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்ட தனி துணை ஆட்சியர் கார்த்திகேயன், வட்ட வழங்கல் அலுவலர்கள் சரவணன், அப்துல்ரகுமான், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஞானரவி, சாலைராம், சக்திவேல், டாக்டர்கள் அஜித்குமார், பிரஷிதா, வருவாய் ஆய்வாளர் நடேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சலீம், மற்றும் வனவர் லோகநாதன் உள்பட அனைத்து துறை அரசு அதிகாரிகள் ஆதிவாசி மக்களின் கிராமங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். புதிய ரே‌ஷன் கார்டுகள் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதிவாசி மக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இதற்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்