மரக்காணம் அருகே 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து குற்றவாளிகளை கைது செய்ய கோரி போலீஸ் நிலையம் முற்றுகை

மரக்காணம் அருகே 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதையொட்டி குற்றவாளிகளை கைது செய்ய கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2017-07-22 22:15 GMT

மரக்காணம்,

மரக்காணம் அருகே அனுமந்தை பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன் (35) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று மணி தனது வீட்டின் முன்பு உள்ள விநாயகர் கோவிலில் அமர்ந்து இருந்ததார். அப்போது அந்த வழியாக ஜெயகாந்தன், அவரது உறவினர் தண்டபானி (50) ஆகியோர் வந்தனர். அவர்களிடம் மணி தகராறு செய்ததாக தெரிகிறது. இதில் அத்திரம் அடைந்த ஜெயகாந்தன் வீட்டில் இருந்து கத்தியை எடுத்துவந்து மணியின் தலை, காலில் குத்தினார். அதே பகுதியைச் செர்ந்த வெங்கட்ராமன் (29) என்பவர் இதனை தடுக்க முயன்றார். அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது.

இதில் படுகாயமடைந்த அவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இந்த சம்பவம் குறித்து மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஜெயகாந்தன், தண்டபாணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் மணியின் உறவினர்கள் 100–க்கும் மேற்பட்டவர்கள் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்