மேற்படிப்புகள் தொடங்க அனுமதிப்பது குறித்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் உயர் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ மேற்படிப்புகளை தொடங்க அனுமதி அளிப்பது குறித்து உயர் அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு நடத்தினார்கள்.
தர்மபுரி,
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி கடந்த 2008–ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் 100 மாணவ–மாணவிகள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்கப்படுகிறார்கள். மருத்துவக்கல்லூரியுடன் இணைந்து செயல்படும் அரசு ஆஸ்பத்திரியில் 58 சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 200 டாக்டர்கள், 300 செவிலியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகிறார்கள். இந்த நிலையில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ மேற்படிப்புகளான எம்.டி, எம்.எஸ். ஆகியவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தமிழக அரசு உரிய பரிந்துரைகளை வழங்கியது.
இந்த நிலையில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ மேற்படிப்புகளை தொடங்க அனுமதி வழங்குவது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சிலை சேர்ந்த உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பேராசிரியர்கள் ஜோசி, ராஜீவ்குலாபி, பேராசிரியை வனிதா குல்கர்னி ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு நடத்தினார்கள். மருத்துவக்கல்லூரியில் உள்ள கட்டிடங்கள், ஆய்வகங்கள், பேராசிரியர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை, மாணவ–மாணவிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து இந்த குழுவினர் ஆய்வு செய்தனர். இதேபோல் மருத்துவக்கல்லூரியின் செயல்பாடு குறித்த பல்வேறு வகையான ஆவணங்களையும், பதிவேடுகளையும் அவர்கள் பார்வையிட்டனர். மருத்துவக்கல்லூரியுடன் இணைந்த அரசு ஆஸ்பத்திரியின் பல்வேறு வார்டுகளையும் மருத்துவ கவுன்சில் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் சீனிவாசராஜி, கண்காணிப்பாளர் இளங்கோ, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி சுரபி, பேராசிரியர் கோவிந்தராஜன் மற்றும் துறைத்தலைவர்கள் உடனிருந்தனர்.