ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி ஓட்டு: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கருத்து

ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி ஓட்டுப்போட்ட எம்.எல்.ஏ.க்கள் குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Update: 2017-07-21 22:00 GMT

மும்பை,

ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி ஓட்டுப்போட்ட எம்.எல்.ஏ.க்கள் குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

கூடுதல் ஓட்டுகள்

ஜனாதிபதி தேர்தல் முடிந்து நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் அமோக வெற்றி பெற்றார். மராட்டியத்தில் அவர் பா.ஜனதா மற்றும் சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் பலத்தை விட கூடுதலாக 23 ஓட்டுகளை பெற்றார். இதில் 10 வாக்குகள் சிறிய மற்றும் சுயேச்சைகளின் ஓட்டுகள் ஆகும்.

மீதமுள்ள 13 வாக்குகளை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தான் ராம்நாத் கோவிந்திற்கு போட்டிருக்க வேண்டும். இது குறித்து பா.ஜனதா ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்தது.

நாங்கள் இல்லை..

இந்தநிலையில் இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சுனில் தட்கரே கூறியதாவது:–

எங்கள் கட்சியை சேர்ந்த 41 எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் மீரா குமாருக்கு தான் ஓட்டுப்போட்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கட்சியை சேர்ந்த மீரா குமாருக்கு எதிராக ஓட்டுப்போட்டுள்ளனர். சரத்பவார் தான் மீரா குமாரின் பெயரை அறிவித்தார். கட்சி உத்தரவிற்கு எதிராக நாங்கள் எப்படி செயல்படுவோம்?.

இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணை நடத்தப்படும்

இது குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவான் கூறுகையில், ‘‘பா.ஜனதாவிற்கு முழு பலம் இருந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுகள் சிதற வாய்ப்பு உள்ளது. யார் கட்சி மாறி ஓட்டுப்போட்டார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளோம்.

தற்போது உள்ள சூழலில் கட்சி மாறி ஓட்டுப்போட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை கூற முடியாது’’ என்றார்.

மேலும் செய்திகள்