கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3–வது, 4–வது அணுஉலைகள் கட்டுமான பணி தீவிரம்
கூடங்குளத்தில் 3–வது, 4–வது அணுஉலைகள் கட்டுமானப் பணி தீவிரமாக நடந்து வருவதாக, அந்த நிலையத்தின் மூத்த என்ஜினீயர் எம்.எஸ்.சுரேஷ் தெரிவித்துள்ளார்.
நெல்லை,
கூடங்குளத்தில் 3–வது, 4–வது அணுஉலைகள் கட்டுமானப் பணி தீவிரமாக நடந்து வருவதாக, அந்த நிலையத்தின் மூத்த என்ஜினீயர் எம்.எஸ்.சுரேஷ் தெரிவித்துள்ளார்.
கருத்தரங்குநெல்லை அறிவியல் மையத்தில் விசுவேசுவரய்யா பற்றிய நடமாடும் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. அறிவியல் மைய அலுவலர் நவராம்குமார் வரவேற்று பேசினார். கல்வி உதவியாளர் மாரி லெனின் அறிமுகம் செய்து பேசினார்.
கூடங்குளம் அணு மின் நிலைய மூத்த என்ஜினீயர் எம்.எஸ்.சுரேஷ், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
கூடங்குளம்கடந்த 15 ஆண்டு கால உழைப்புதான் கூடங்குளம் அணு மின் நிலையம் ஆகும். தற்போது அங்கு 1, 2–வது அணு உலைகள் மூலம் மின் உற்பத்தி நடந்து வருகிறது. 3–வது மற்றும் 4–வது அணு உலைகள் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தியாவிலேயே அதிக மின் உற்பத்தி திறன் கொண்டது கூடங்குளம் அணுமின் நிலையாகும். இங்கு தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் தற்போது இயங்கி வருகின்றன.
அறிவியலை கற்க வேண்டும்ஆசிரியர்கள், தங்களுடைய மாணவர்களை கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு அழைத்து வந்து காண்பிக்க வேண்டும். அடிப்படை அறிவியலை இளம் வயதிலேயே படிக்க வேண்டும். வாழ்வியலுடன் கூடிய அறிவியலை ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். நாம் அன்றாடம் செய்யும் வேலைகளில் உள்ள அறிவியலை கற்றுக் கொள்ள வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் போல் மாணவர்கள் கனவு காண வேண்டும். அதை நோக்கி பயணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் பல்வேறு பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் கல்வி உதவியாளர் பொன்னரசன் நன்றி கூறினார்.