செம்பட்டி அருகே, மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்: கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி

செம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2017-07-21 03:52 GMT
செம்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள ஜெ.புதுக்கோட்டையை சேர்ந்த முருகன் மகன் ஹரிகரன் (வயது 18). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த மல்லையன் மகன் மணிஷ் (19). இவர் கரூரில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் படித்து வருகிறார். நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஜெ.புதுக்கோட்டையில் இருந்து ஆத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை ஹரிகரன் ஓட்டினார்.

ஆத்தூர் பிரிவு அருகே கோழிப்பண்ணை என்ற இடத்தில் சென்றபோது, செம்பட்டியில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் பஸ்சின் அடியில் சொருகிக்கொண்டது. மேலும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த ஹரிகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயங்களுடன் மணிஷ் உயிருக்கு போராடினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் செம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்த மணீசை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பலியான ஹரிகரனின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணிஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த நண்பர்கள் 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்