கடைகளில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை

கடைகளில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2017-07-20 22:45 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி பகுதியில் உள்ள மளிகை கடைகள், உணவகங்கள், பேக்கரிகள், இறைச்சி மற்றும் மீன் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலர் சாலோடீசன் தலைமையில் அலுவலர்கள் ஆதிகோபால கிருஷ்ணன், அருண் குமார், சிவராஜ் ஆகியோர் கடைகளில் ஆய்வு செய்து காலா வதியான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் மார்க்கெட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

‘பேக்கிங்‘ செய்யப்பட்ட மளிகை பொருட்களில் தயாரிப்பு தேதி, ‘பேக்கிங்‘ செய்த தேதி, காலாவதி தேதி அடங்கிய ரசீது கட்டாயமாக இருக்க வேண்டும். காலாவதியான பொருட்கள் மற்றும் தரமற்ற உணவு பொருட்களை கடைகளில் விற்பனை செய்யக் கூடாது. கோழி, ஆட்டு இறைச்சியை திறந்த வெளியில் தொங்கவிட்டு விற்பனை செய்யக்கூடாது.

மீன் மற்றும் இறைச்சி வகைகளை வலைக்குள் மூடிவைத்து ஈக்கள் மொய்க்காத வகையில் ஐஸ் கட்டிகள் போட்டு பாதுகாப்பாக வைத்து விற்பனை செய்ய வேண்டும். இதுகுறித்து வியாபாரிகளுக்கு அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளோம். எனினும், ஒரு சில கடைகளில் வியாபாரிகள் வைத்திருந்த காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து அழித்து வருகிறோம். இதே நிலை தொடர்ந்தால் வருங்காலங்களில் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்