சிறுபான்மையின மக்களுக்கு அரசு பல்வேறு உதவிகள் செய்துள்ளது ஆணைய குழு தலைவர் தகவல்

தமிழகத்தில் சிறுபான்மையின மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகள் செய்துள்ளதாக சிறுபான்மையின ஆணைய குழு தலைவர் பேராயர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2017-07-20 22:45 GMT
சிவகங்கை,

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பேராயர் பிரகாஷ் தலைமையில் உறுப்பினர்கள் அல்ஹஜ் சையது கமீல்பாசீத், ஜஸ்டின்செல்வராஜ், பேராயர் ஜேம்ஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று சிவகங்கை வந்தனர். பின்னர் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மை நல குழு ஆலோசனை கூட்டம் ஆணைய குழு தலைவர் பேராயர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மலர்விழி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பேராயர் பிரகாஷ் பேசியதாவது:- தமிழகத்தில் வசிக்கும் சிறுபான்மை மக்களான கிறிஸ்தவர், முஸ்லிம்கள் ஆகியோருடைய குறைகளை கேட்டறிந்து அவைகளை சரிசெய்ய அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு இந்த குழு பரிந்துரை செய்கிறது.

இதில் பல இடங்களில் அவர்களின் குறைகள் சரிசெய்யப்பட்டுஉள்ளது. சரிசெய்யமுடியாதவைகளை தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் தங்களுக்கு கல்லறை தனியாக வேண்டும் என்று கேட்டிருந்தனர். பல இடங்களில் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுஉள்ளது. மேலும் பல இடங்களில் ஆலயங்கள், பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி தரவேண்டும் என்று தெரிவித்திருந்தனர். அவைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து அனுமதி பெற்று தந்துள்ளோம்.

தமிழகத்தில் சிறுபான்மையின மக்களுக்கு அரசு மூலம் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளன. 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழுதடைந்த கிறிஸ்தவ ஆலயங்களை சீரமைக்க ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரை நிதி கிடைத்துள்ளது. இதேபோல் பல பள்ளிவாசல்களை சீரமைக்க வக்பு வாரியத்தின் சார்பில் நிதி தருவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெருசலத்திற்கு புனித பயணம் செல்வோருக்கு வழங்கப்படும் மானியத்தை அரசு தற்போது உயர்த்தி உள்ளது.

முஸ்லிம்களுக்கு ஹஜ் யாத்திரை செல்வதற்கான மானியம் அதிகரிக்கப்பட்டுஉள்ளது. உலமாக்கள் வாரியம் மூலம் பலர் உதவி பெற்று வருகின்றனர். சிறுபான்மை மக்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுஉள்ளது. முஸ்லிம் மகளிர் சங்கங்கள் மூலமாக விதவை மற்றும் ஆதரவற்ற முஸ்லிம்களுக்கு நிதி உதவி செய்யப்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் சிவகங்கை கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரிகள், சிறுபான்மை நல பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் நலத்திட்ட உதவிகளை பேராயர் பிரகாஷ் வழங்கி சிறுபான்மையின மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மேலும் செய்திகள்