பலத்த காற்றுடன் திடீர் மழை; 10 மரங்கள் சாய்ந்தன
புதுச்சேரியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் நகரில் பல இடங்களில் 10க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. வீட்டின் மேற்கூரைகள் பறந்தன.
புதுச்சேரி,
புதுச்சேரியில் தொடர்ச்சியாக வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. மாலையில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசி வந்தது. இந்தநிலையில் புதுவையில் மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் புதுவை துறைமுகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
இந்தநிலையில் வழக்கம்போல் புதுவையில் நேற்று காலை வெயில் கொளுத்தியது. திடீரென்று பிற்பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. மாலை 5.30 மணி அளவில் நகர் மற்றும் புதுவையில் பெரும்பாலான பகுதிகளில் திடீரென்று பலத்த காற்று வீசியது. இதனால் முக்கிய சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் புழுதி பறந்தது.
இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும், நடந்து சென்றவர்களும் அவதி அடைந்தனர். கண்களில் தூசி விழுந்ததால் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்ல முடியாமல் சிறிது நேரம் நின்று சென்றனர்.
மரங்கள் சாய்ந்தன
இதைத்தொடர்ந்து மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது. பலத்த காற்று, மழையால் பல இடங்களில் வீட்டின் மேற்கூரைகள், விளம்பர தட்டிகள் பறந்தன. செட்டிதெரு, பாரதி பூங்கா, மறைமலை அடிகள் சாலை, ஜீவானந்தம் வீதி, தட்டாஞ்சாவடி ஆகிய இடங்களில் இருந்த 10க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் விழுந்தன.
இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள், நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முறிந்து விழுந்த மரத்தின் கிளைகளை எந்திரத்தால் வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.
இந்த மழையால் சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. வெயில் கொளுத்தி வந்த நிலையில் இந்த மழையால் புதுவையில் ஓரளவு வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த காற்று வீசியது.