ஆரணியில் கல்லூரி மாணவி படுகொலை: காதலன் போலீசில் சரண்

ஆரணியில் கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாணவியின் முன்னாள் காதலன் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்தார்.

Update: 2017-07-19 22:00 GMT

ஆரணி,

ஆரணியில் கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாணவியின் முன்னாள் காதலன் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்தார். அவரை, போலீசார் கைது செய்தனர். கைதான காதலன், போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஆரணியை அடுத்த மலையாம்பட்டு காலனி பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் மதியழகனின் மகள் மோனிகா (வயது 19). இவர், வேலூரில் தங்கி, காட்பாடி காந்திநகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ.3–ம் ஆண்டு படித்து வந்தார். குன்னத்தூரில் இருந்து கீழ்நகர் செல்லும் சாலையில் ஒரு ஏரியில் மோனிகா கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

புங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த தவசீலன் மகன் கோகுல்நாத் (வயது 25) என்பவர் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு மோனிகாவை திருமணம் செய்வதற்காக அவரின் பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளார். அவருக்கு பெண் கொடுக்க மோனிகாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. கோகுல்நாத்துக்கு பெண் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் தான் மோனிகா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தக் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு கோகுல்நாத்தை போலீசார் அழைத்துச் செல்ல இருந்தனர். அதற்குள் அவர், புங்கம்பாடி கிராம நிர்வாக அலுவலர் வி.கோபிநாத்திடம் சரண் அடைந்துள்ளார். அப்போது அவர் கத்தியால் வயிற்றுப்பகுதியில் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.

கோகுல்நாத்தை ஆரணி தாலுகா போலீசில், கிராம நிர்வாக அதிகாரி ஒப்படைத்தார். கோகுல்நாத்தை போலீசார் கைது செய்து, சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கோகுல்நாத்திடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.

அப்போது கோகுல்நாத் போலீசாரிடம் தெரிவித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:–

நான் 8–ம் வகுப்பு படிக்கும்போதே மோனிகாவை காதலித்து வந்தேன். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு மோனிகாவை திருமணம் செய்து வைக்க சொல்லி அவருடைய பெற்றோரிடம் பெண் கேட்டேன். அதற்கு அவர்கள் உனக்கு வேலையில்லை. பெண் தர முடியாது என மறுத்து விட்டனர். அதைத்தொடர்ந்து நான் பெங்களூரு சென்று கூலி வேலை செய்து வந்தேன். விடுமுறையில வரும்போதெல்லாம் மோனிகாவை தனியாக சந்தித்து வந்தேன்.

இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக மோனிகா என்னிடம் பேச மறுத்து, செல்போன் நம்பரை மாற்றி விட்டார். பின்னர் அவரின் தோழியின் மூலமாக அவருடைய புதிய செல்போன் நம்பரை பெற்று, கடந்த இரண்டு நாட்களாக பேசி வந்தேன். 17–ந்தேதி கல்லூரியில் இருந்து மோனிகாவை ஏலகிரிக்கு அழைத்துச் சென்றேன். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து மதியம் 1.30 மணிக்கு மோட்டார்சைக்கிளில் புங்கம்பாடிக்கு அழைத்து வந்தேன்.

அப்போது என்னை விட்டு விட்டு மோனிகா வேறொரு வாலிபரை காதலித்து வருவதையும், அந்த வாலிபரின் புகைப்படத்துடன் என்னிடம் காட்டி பேசியபோது, அதற்கு அவர் என்னை பற்றி நீ கேட்கக்கூடாது. நான் யாரிடம் வேண்டுமானாலும் பேசுவேன். ஆனால் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மோனிகா கூறினார். அவ்வாறு பேசும்போதே எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் குன்னத்தூர் பஸ் நிலையம் வரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்லும் வழியில் மீண்டும் எங்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.

குன்னத்தூரில் இருந்து கீழ்நகர் செல்லும் வழியில் உள்ள ஒரு ஏரிக்கரை அருகே மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு, மீண்டும் மோனிகாவிடம் பேசினேன். அவர் திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரம் அடைந்த நான், ‘‘எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது’’ என்று கூறி, மோட்டர்சைக்கிளில் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியால் கண்மூடித்தனமாக குத்தியும், சரமாரியாக வெட்டியும் சாய்த்தேன். பின்னர் ஊருக்குச் சென்று அங்கிருந்து கிராம நிர்வாக அலுவலர் மூலமாக சரண் அடைந்தேன்.

இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

ஆரணி தாலுகா போலீசார், கோகுல்நாத்தை ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்